‘டெல்லி போவதாக சொன்னார்’- யூடியூபரின் தந்தை சொன்ன பகீர்… அடுத்தடுத்து வெளியாகும் திடுக் தகவல்கள்!
youtuber jyoti malhotra : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக யூடியூபர் சோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் இருக்கிறது. இவரிடம் தற்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு முன் இவர் 2 முறை பாகிஸ்தான் சென்றிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி, மே 20 : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த இளம்பெண் ஜோதி மல்ஹோத்ரா (youtuber jyoti malhotra) குறித்து திடுக்கடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இவர் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இரண்டு முறை பாகிஸ்தான் சென்ற வந்ததும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் நட்புடன் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், சில முக்கிய தகவல்களும் வெளியாகி உள்ளது. ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதில் கிட்டத்தட்ட நான்கு லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இந்திய இராணுவத் தகவல்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டதற்காக கடந்த வாரம் இவர் கைது செய்யப்பட்டார். 33 வயதான அவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பெண்
இதுவரை ஜோதியிடம் ஹிசார் காவல்துறையின் இராணுவ புலனாய்வு மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் விரிவாக விசாரணை நடத்தினர், ஆனால் இப்போது என்ஐஏ குழு விசாரித்து வருகிறது. மேலும், அவர் பாகிஸ்தான் தூதுரக அதிகாரி ஒருவர் மூலம் குறைந்தது இரண்டு முறை பாகிஸ்தானுக்குச் சென்றிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
2025 ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு ஜோதி மல்ஹோத்ரா காஷ்மீருக்குச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் சில உயர் பதவியில் உள்ளவர்களை சந்தித்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இவர் காஷ்மீருக்கு சென்றிருப்பதற்காக புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
போலீஸ் விசாரணையின்படி, மல்ஹோத்ராவை முதலில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஷுக்கு ஹரியானா சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் ஊழியரான ஹர்கிராத் சிங் அறிமுகப்படுத்தினார். ஹர்கிராத் சிங் அவருக்கு விசா பெற இரண்டு முறை உதவியதாகவும், பாகிஸ்தானுக்கு சீக்கியப் பயணத்துடன் அவரை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
வெளியான திடுக்கிடும் தகவல்
இதற்கிடையில், ஜோதி மல்ஹோத்ராவின் தந்தை கூறுகையில், “அவர் டெல்லிக்குப் போவதாக என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் என்னிடம் எதுவும் சொல்லவே இல்லை.அவள் வீட்டில் வீடியோக்களை உருவாக்குவார்” என்றார். ஜோதி மல்ஹாத்திரா பாகிஸ்தான் சென்றிருப்பதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், இதற்கு அவரது தந்தை மறுத்துள்ளார்.
ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்கு செல்வதற்கு டேனிஷ் உதவி செய்துள்ளாதாகவும், அவருடைய உதவியாளர் தான் பாகிஸ்தானில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அவர்களுடன் வாட்ஸ் அப் உள்ளிட்ட செயல் மூலம் தொடர்ந்து தொடர்பில் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
ஜோதி தனது யூடியூப் சேனலில் 450க்கும் மேற்பட்ட காணொளிகளைப் பதிவேற்றியுள்ளார். அவரது சில காணொளிகள் அவரது பாகிஸ்தான் வருகை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் இந்தியப் பெண்’, ‘லாகூரைச் சுற்றியுள்ள இந்தியப் பெண் என கேப்ஷனுடன் வீடியோக்களை பதிவிட்டு உள்ளதாக தெரிகிறது. இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.