சபரிமலை: பக்தர்கள் மீது டிராக்டர் மோதி விபத்து.. 2 தமிழர்கள் உட்பட 9 பேர் காயம்..
Sabarimala Accident: குப்பைகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. கனமழை காரணமாக செங்குத்தான சாலையில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் டிராக்டர் ஓட்டுநரை சன்னிதானம் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 2 தமிழர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர்.

கோப்பு புகைப்படம்
கேரளா, டிசம்பர் 13, 2025: சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டத்திற்குள் டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒன்பது பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். இந்த சம்பவம் டிசம்பர் 13, 2025 தேதியான இன்று மாலை 6 மணியளவில் நடந்தது. சபரிமலையில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதன் காரணமாக, ஏராளமான பக்தர்கள் அங்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காக கோயில் தரப்பில் பிரத்யேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சபரிமலை சீசன்:
மகர விளக்கு மண்டல பூஜை காரணமாக, அடுத்த ஒரு மாதத்திற்கு சபரிமலை சன்னிதானம் திறந்திருக்கும். சபரிமலை ஐயப்பன் கோயிலைப் பொறுத்தவரையில், மற்ற கோயில்களைப் போல தினசரி நடை திறந்திருக்காது; குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே நடை திறந்திருக்கும். அதாவது, மாதம் ஒருமுறை நடை திறக்கப்படும். அதனைத் தொடர்ந்து, மகர விளக்கு மண்டல பூஜை காரணமாக நடை திறந்திருக்கும்.
மேலும் படிக்க: 2.5 லட்சம் மதிப்பிலான கிளிக்காக உயிரை விட்ட தொழிலதிபர்.. பெங்களூரில் சோக சம்பவம்!
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு காயம்:
தற்போது சீசன் என்பதன் காரணமாக, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த சூழலில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டத்திற்குள் டிராக்டர் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் நான்கு பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்ற மூவர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். காயமடைந்தவர்கள் வீரா ரெட்டி (30), நிதிஷ் ரெட்டி (26), துருவன்ஷ் ரெட்டி (10), சுனிதா (65) மற்றும் துளசி அம்மா (60) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: திருவனந்தபுரம் மாநகராட்சி இடைத்தேர்தல்.. கேரள அரசியலில் ஒரு தீர்க்கமான தருணம் – பிரதமர் மோடி..
கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரால் விபத்து:
குப்பைகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. கனமழை காரணமாக செங்குத்தான சாலையில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் டிராக்டர் ஓட்டுநரை சன்னிதானம் போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த நேரத்தில் டிராக்டரில் ஐந்து பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.