2.5 லட்சம் மதிப்பிலான கிளிக்காக உயிரை விட்ட தொழிலதிபர்.. பெங்களூரில் சோக சம்பவம்!
Bengaluru Businessman Electrocuted and Died | பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் மிகவும் விலை உயர்ந்த கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த கிளி வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் விழுந்த நிலையில், அதனை காப்பாற்ற சென்ற அந்த தொழிலதிபர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.
பெங்களூரு, டிசம்பர் 13 : கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரில் (Bengaluru) உள்ள கிரிநகர் பகுதியை சேர்ந்தவர் அருண் குமார். 32 வயதாகும் இவர் தொழிலதிபராக உள்ளார். இவர் தனது வீட்டில் மக்கா வகை கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த கிளி மிகவும் விலை உயர்ந்தது என்று கூறப்படுகிறது. அதாவது அவர் வளர்த்து வந்த அந்த கிளி ரூ.2.5 லட்சம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 12, 2025) அருண் குமார் வீட்டில் இருந்து பறந்து சென்ற அந்த கிளி வீட்டின் அருகில் உள்ள மின் கம்பத்தின் மீது விழுந்துள்ளது.
கிளியை பிடிக்க சுற்றுசுவர் மீது ஏறியதால் நடந்த விபரீதம்
அதனை கண்டு அருண் குமார் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், கிளியை காப்பாற்றுவதற்காக கிளி இருந்த இடத்தில் அருகில் இருந்த ஒரு சுற்று சுவர் மீது ஏறி, கிளியை மீட்பதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த இரும்பு பைப் மீது சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் அருண் குமாரின் கை பட்டுள்ளது. அதன் காரணமாக அவரது உடலில் கடும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதையும் படிங்க : பெண்ணை கட்டி போட்டு நகை மற்றும் பணம் கொள்ளை.. பெங்களூரில் பகீர் சம்பவம்!
மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த தொழிலதிபர்
அதிக மின்சாரம் பாய்ந்த நிலையில் அருண் குமார் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடியுள்ளார். அவரை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : பஹல்காம் தாக்குதல் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை…பாகிஸ்தானுக்கு தண்ணி காட்டிய இந்தியா!
கிளியை பிடிக்க சென்ற தொழிலதிபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.