குடியரசு தினம் கொண்டாடுவதற்கான காரணம் என்ன? இந்திய அரசியலமைப்பு குறித்த 7 முக்கிய தகவல்கள்
Republic Day 2026: இந்தியாவில் வருகிற ஜனவரி 26, 2026 அன்று குடியரசு தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. இதனையடுத்து புதுடெல்லியில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுரையில் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கு காரணமாக அமைந்த இந்திய அரசியலமைப்புகுறித்து 7 முக்கிய தகவல்களைப் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
புதுடெல்லி, ஜனவரி 24 : இந்தியாவில் குடியரசு தினம் (Republic Day) கொண்டாடப்படுவதற்கு காரணமான இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், இந்திய மக்களின் கனவுகள், சமூக பல்வகைமை மற்றும் ஜனநாயக மதிப்பீடுகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த அரசியலமைப்பை உருவாக்கினார். சுதந்திர இந்தியாவின் அடித்தளமாக விளங்கும் இந்திய அரசியலமைப்பு, சமத்துவம், நீதி, சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய அடிப்படை கொள்கைகளை உறுதிப்படுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு உலகிலேயே மிக நீளமான எழுத்துப்பூர்வ அரசியலமைப்பாகும். ஆரம்பத்தில் இதில் 22 பகுதிகள் மற்றும் 395 கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. காலப்போக்கில் பல திருத்தங்கள் செய்யப்பட்டதால், தற்போது இது 25 பகுதிகள் 470க்கும் மேற்பட்ட கட்டுரைகள் கொண்டதாக உள்ளது. இந்தியாவின் பரந்த பரப்பளவு, மக்கள் தொகை மற்றும் சமூக வேறுபாடுகளை கருத்தில் கொண்டு இந்த விரிவான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு குறித்த 7 முக்கிய தகவல்கள்
- உலகின் பல நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து தாக்கம் பெற்று உருவாக்கப்பட்டிருப்பது இந்திய அரசியலமைப்பின் ஒரு முக்கிய சிறப்பு. இங்கிலாந்தில் இருந்து நாடாளுமன்ற முறை, அமெரிக்காவிலிருந்து அடிப்படை உரிமைகள், அயர்லாந்திலிருந்து மாநில வழிகாட்டி கொள்கைகள், கனடாவிலிருந்து கூட்டாட்சி அமைப்பு போன்ற அம்சங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்திய சூழ்நிலைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
- இந்திய அரசியலமைப்பின் மூல பிரதிகள், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பிரேம் பிஹாரி நாராயண் ராய்சாதா என்பவரால் கையால் எழுதப்பட்டு உருவாக்கப்பட்டன.
இதையும் படிக்க : Republic Day Parade 2026 : குடியரசு தின அணிவகுப்புக்கு தயார் நிலையில் டெல்லி.. நேரலை விவரங்கள் இதோ!
- சாந்திநிகேதனத்தைச் சேர்ந்த நந்தலால் போஸ் உள்ளிட்ட கலைஞர்களால் அழகிய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஆவணம், ஒரு சட்ட ஆவணமாக மட்டுமல்லாமல் ஒரு கலைப் படைப்பாகவும் திகழ்கிறது.
- இந்திய அரசியலமைப்பு அரசியலமைப்பு சபை மூலம் கடந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், 1930 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பூர்ண சுவராஜ் தீர்மானத்தை நினைவுகூரும் வகையில், 1950 ஜனவரி 26-ஆம் தேதி இது நடைமுறைக்கு வந்தது. இதன் நினைவாகவே ஜனவரி 26 குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
- கடினத்தன்மையும் நெகிழ்வுத்தன்மையும் ஒருங்கே கொண்ட அமைப்பாக இந்திய அரசியலமைப்பு விளங்குகிறது. சில திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையால் செய்ய முடியும். சில முக்கியமான திருத்தங்களுக்கு சிறப்பு பெரும்பான்மை மற்றும் மாநில சட்டமன்றங்களின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இதனால் காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை இதற்கு உள்ளது.
இதையும் படிக்க : மக்கானா முதல் மைக்ரோசிப் வரை.. இந்தியாவின் வளர்ச்சிக் கதையை விவரிக்க உள்ள குடியரசு தின பேரணி..
- ஆரம்ப அரசியலமைப்பில் இடம்பெறாத அடிப்படை கடமைகள், 1976 ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டன. ஸ்வரண் சிங் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட இக்கடமைகள், குடிமக்களின் சமூக பொறுப்புணர்வை வலுப்படுத்துகின்றன. தற்போது இந்திய குடிமக்களுக்கு 11 அடிப்படை கடமைகள் உள்ளன.
- அதே 1976 ஆம் ஆண்டு 42வது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பின் முன்னுரையில் மதச்சார்பற்ற மற்றும் சோசலிஸ்ட் என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. இது மத சுதந்திரம், சமூக நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றில் இந்தியா கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு, இந்திய அரசியலமைப்பு உலகிற்கு ஒரு ஜனநாயக முன்மாதிரியாக தொடர்ந்து திகழ்கிறது.