இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்புகள்.. 100-ல் 11 பேருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்.. ஷாக் ரிப்போர்ட்..
Cancer Report In India: சமீபத்திய ஆய்வுகளின் படி இந்தியாவில் புற்றுநோய் அபாயங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு நூறு பேரில் 11 பேருக்கு புற்றுநோய் அபாயம் இருக்கலாம் அல்லது கண்டறியப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் 15.6 லட்சம் புதிய புற்றுநோய் வழக்குகள் பதிவாகியுள்ளது.

புற்றுநோய் பாதிப்புகள்: இந்தியாவில் புற்றுநோய் விகிதங்கள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் லட்சக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை உள்ளடக்கிய 43 மக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் பதிவேடுகளின் தரவுகளின் சமீபத்திய பகுப்பாய்வு, நாடு முழுவதும் வளர்ந்து வரும் புற்றுநோய் விகிதங்களை திட்டவட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தனிநபர்கள் இப்போது 11% புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். அதாவது, ஒவ்வொரு நூறு பேரில் 11 பேருக்கு புற்றுநோய் அபாயம் இருக்கலாம் அல்லது கண்டறியப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 15.6 லட்சம் புதிய புற்றுநோய் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த புற்றுநோய் பாதிப்பால் சுமார் 8.74 லட்சம் இறப்புகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவேடுகளின் படி, 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள்தொகையின் 10% முதல் 18% வரை மட்டுமே உள்ளடக்கப்பட்டிருந்தாலும், புற்றுநோய் முறைகள், இறப்பு மற்றும் பிராந்திய வேறுபாடுகள் குறித்த முக்கியமான நுண்ணறிவுகளை இவை வழங்குகின்றன.
பெண்களிடையே அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்புகள்:
மேலும், புற்றுநோய் பாதிப்பு பெண்களுக்கு அதிகமாக இருப்பதாகவும், ஆனால் இறப்பு விகிதம் ஆண்களை விட பெண்களுக்கு குறைவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தரவுகளின் படி, 51% புற்றுநோய் பாதிப்புகளில் பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே இறப்பு விகிதம் 45% ஆக உள்ளது. இது ஆண்களை ஒப்பிடுகையில் குறைவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) தேசிய தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பிரசாத் மாத்தூர் கூறுகையில், ” மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்புற்றுநோய்கள் பெண்களிடையே அதிகமாக (கிட்டத்தட்ட 40%) காணப்படுகின்றன. ஆனால் இந்த இரண்டு வகை புற்றுநோய்கள் முன்கூட்டியே கண்டறியக்கூடியவை என்பதால் எளிதில் சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டார். அதேசமயம், ஆண்களிடையே நுரையீரல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஆண்களிடையே பரவலாக காணப்படும் நுரையீரல்/ வயிற்று புற்றுநோய்:
எய்ம்ஸ் புற்றுநோய் நிபுணர் டாக்டர் அபிஷேக் சங்கர் கூறுகையில், ஆண்கள் பெரும்பாலும் நுரையீரல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிவது கடினம் என்பதால் பெரும்பாலும் கடைசி கட்டங்களில் மட்டுமே கண்டுபிடிக்க முடிகிறது. இந்த தாமதமான கண்டறிதல் ஆண்களில் இறப்பு விகிதத்தை கணிசமாக அதிகரிக்கிறது என்றும் குறிப்பிட்டார். மேலும், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை கண்டறிவது எளிது. பெண்களின் மார்பகங்களில் சிறு கட்டிகள் போன்ற ஆரம்ப அறிகுறிகள் கவனிக்கப்படுகின்றன. ஆனால் நுரையீரல் புற்றுநோய் பெரும்பாலும் கடைசி கட்டங்களில் மட்டுமே கண்டறியப்படுவதால், சிகிச்சை தாமதமாகிறது.
வாய்வழி புற்றுநோய் ஏற்பட என்ன காரணங்கள் ?
மேலும், ஆண்களிடையே வாய்வழிப் புற்றுநோய் இப்போது அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். புகையிலை பயன்பாடு குறைந்துள்ள போதிலும், வாய்வழிப் புற்றுநோய் நுரையீரல் புற்றுநோயை விட இந்தியாவில் அதிகமாக ஆண்களை பாதித்து வருகிறது. உலகளாவிய புகையிலை கணக்கெடுப்பின் படி, புகையிலை நுகர்வு 2009–2010 ஆம் ஆண்டுகளில் 34.6% ஆக இருந்தது. ஆனால் 2016–2017 ஆம் ஆண்டுகளில் இது குறைந்து 28.6% ஆக தாழ்ந்துள்ளது. இருப்பினும், மது அருந்துதல் போன்ற காரணங்களால் வாய்வழிப் புற்றுநோய் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவர்கள் கூறுகையில், மது அருந்துவது கல்லீரல் புற்றுநோயை மட்டுமல்லாது வாய், தொண்டை, வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. புகையிலை மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றின் கலவையானது இந்த ஆபத்தை மேலும் தீவிரப்படுத்துகிறது.
மேலும் படிக்க: ஓணம் கொண்டாட்டத்தில் சோகம்.. அரசு ஊழியர் நடனமாடிய போது உயிரிழப்பு
புற்றுநோய் பாதிப்பு – மிசோரம் முதலிடம்:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பெண்களிடையே புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக கர்ப்பப்பை, நுரையீரல் மற்றும் வாய்வழிப் புற்றுநோய்கள் அடங்கும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் அதிக புகையிலை பயன்பாடு, காரமான அல்லது உலர்ந்த இறைச்சி, மீன் போன்ற உணவுகள் உட்கொள்வது, மேலும் சில தொற்று நோய்களின் பரவல் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.
இந்தியாவிலேயே மிசோரம் மாநிலம் அதிக புற்றுநோய் ஆபத்தைக் கொண்டுள்ளது. அங்கு ஆண்களுக்கு 21.1% மற்றும் பெண்களுக்கு 18.9% பாதிப்பு பதிவாகியுள்ளது. இது நாட்டின் சராசரியைக் காட்டிலும் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மூன்று மனைவிகளை கைவிட்ட நபர்.. 4வது காதலியை உயிருடன் எரித்த கொடூரம்.. பகீர் சம்பவம்!
புற்றுநோய் பாதிப்புகளை தவிர்ப்பது எப்படி?
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, பெரும்பாலான புற்றுநோய்கள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் தடுக்கக்கூடியவை. முக்கிய ஆபத்து காரணிகளை தவிர்ப்பதன் மூலம், ஆரம்பகால கண்டறிதலை மேம்படுத்துவதன் மூலம் மற்றும் பொருத்தமான சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் 30% முதல் 50% வரை புற்றுநோய்களைத் தடுக்க முடியும். மேலும், வழக்கமான பரிசோதனைகள், தடுப்பூசி திட்டங்கள், பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றை முறையாக பின்பற்றினால் புற்றுநோய் பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.