ஷூ வீசப்பட்ட விவகாரம்.. தலைமை நீதிபதி கவாயை பாராட்டிய பிரதமர் மோடி!
Chief Justice BR Gavai on Shoe Attack: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது ஷூ வீசப்பட்ட சம்பவத்திற்கு அவர் பதிலளித்துள்ளார். வழக்கு விசாரணையில் கவனம் சிதறவில்லை என்றும், ஷூ தன்னை தாக்கவில்லை என்றும் கூறினார். "பிரச்சனையை விளக்க முயற்சித்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

பி.ஆர்.கவாய் - பிரதமர் மோடி
இந்தியா, அக்டோபர் 8: தன் மீது ஷூ வீசப்பட்ட விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதிலளித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இந்த சம்பவம் நடந்தபோது வழக்கு ஒன்று விசாரணையில் இருந்தது. என் மீது ஷூ வீசப்பட்டதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் நான் இந்த சம்பவத்தால் திசை திருப்பப்படவில்லை. அதனை புறக்கணித்து விடுங்கள். நீங்களும் கவனத்தை சிதறடிக்காமல் வழக்கில் கவனம் செலுத்துங்கள் என வழக்கறிஞரிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் வீசப்பட்டதாக கூறப்படும் ஷூ என் மீதோ அல்லது என் மேசை மீதோ எதுவும் விழவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் கூறியுள்ளார். நான் அதன் சத்தத்தை மட்டுமே கேட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். அந்த நபர் என் மீது ஷூ எறிந்ததற்கு பதில் பிரச்னையை விளக்க முயற்சிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
உச்ச நீதிமன்றத்தில் நேற்று (அக்டோபர் 6) வழக்கு விசாரணையின் போது 71 வயதான வழக்கறிஞர் ஒருவர் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணியை வீசினார். இதனால் உச்சநீதிமன்றம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வழக்கறிஞரை வெளியே அழைத்துச் செல்லும்போது, ”சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது” என்று கூச்சலிட்டார்.
மத்தியப் பிரதேசத்தில் சேதமடைந்த விஷ்ணு சிலையை மீட்டெடுப்பது தொடர்பான மனுவை விசாரிக்கும் போது, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்த கருத்து மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறிய நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கைது செய்யப்பட்டார்.பின்னர் சிறிது நேரத்தில் டெல்லி காவல்துறையினர் அவரை நீதிமன்ற வளாகத்திலேயே தங்கள் காவலில் இருந்து விடுவித்தனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு
Spoke to Chief Justice of India, Justice BR Gavai Ji. The attack on him earlier today in the Supreme Court premises has angered every Indian. There is no place for such reprehensible acts in our society. It is utterly condemnable.
I appreciated the calm displayed by Justice…
— Narendra Modi (@narendramodi) October 6, 2025
இந்நிலையில் ஷூ வீச்சு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். பின்னர் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதில், “இதுபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டபோது நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டினேன். இது நீதியின் மதிப்புகள் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. உச்ச நீதிமன்ற வளாகத்தில் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது. நமது சமூகத்தில் இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயல்களுக்கு இடமில்லை. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.