நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: இன்று வெளியாகிறது அறிவிப்பு

Ec Announcement About SIR: தேர்தல் ஆணையர்கள் இன்று மாலை டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின்போது, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: இன்று வெளியாகிறது அறிவிப்பு

தலைமை தேர்தல் ஆணையம்

Published: 

27 Oct 2025 08:42 AM

 IST

வாக்காளர் பட்டியலை திருத்தும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision – SIR) குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில், தலைமை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் தேர்தல் நடக்க உள்ள பீகாரில் இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டிலும் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுமா என கேள்வி எழுந்தது.

மேலும் படிக்க: 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் – நயினார் நாகேந்திரன்..

இந்நிலையில், டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்காளர்கள் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (SIR) குறித்து அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 10 மாநிலங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக அங்கு வாக்காளர் பட்டியலில் இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் மேற்கொண்டது. சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரிலான இந்த செயல்முறை மூலம் போலி வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை கொண்டவர்கள், மரணமடைந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து ஊடுருவியவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் சரிசெய்யப்படுத்தப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த செயல்முறையில் சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: அதிகரிக்கும் இரிடியம் மோசடி.. சிபிசிஐடி அதிரடி சோதனை.. 50 பேர் கைது..

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதேபோல், தமிழகத்திலும் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இன்று மாலை இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் தமிழக அரசியல் கட்சிகள் அதனை கூட்டாக எதிர்க்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது. அதோடு, அனைத்து கட்சி கூட்டத்திற்கும் முதல்வர் தலைமையில் அழைப்பு விடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.