Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காவல்துறை துன்புறுத்தல்…டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு!

National Herald Case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்குமாருக்கு டெல்லி காவல் துறை அளித்த நோட்டீஸால் தான் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கை தேவையில்லாதது என்று கருத்து தெரிவித்துடன், குற்றஞ்சாட்டி உள்ளார் .

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காவல்துறை துன்புறுத்தல்…டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு!
நேஷனல் ஹெரால்டு வழக்கால் துன்புறுத்தல்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 06 Dec 2025 15:29 PM IST

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக நிதி மற்றும் பரிவர்த்தனை விவரங்களைக் கோரி டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸை துன்புறுத்தல் என்று டி.கே. சிவகுமார் சனிக்கிழமை தெரிவித்தார். இதனை சட்டப்பூர்வமாக எதிர்த்து போராடுவேன் என்றும் கூறினார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை ஏற்கெனவே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ள நிலையில், தனி போலீஸ் விசாரணை தேவையா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு முக்கிய ஆவணம்

இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக இந்த ஆண்டு அக்டோபர் 3- ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான முக்கியமான தகவல்கள் சிவகுமாரிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இண்டிகோ சேவை ரத்து: விண்ணை முட்டிய விமான டிக்கெட் விலை.. பயணிகள் கடும் அவதி!!

என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கும் நிகழ்வு

இது தொடர்பாக துணை முதல்வர் டி. கே. சிவக்குமார் கூறுகையில், இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. நான் அனைத்து விவரங்களையும் அமலாக்கத் துறையிடம் அளித்துள்ளேன். அமலாக்கத் துறை என்னையும், என் சகோதரரையும் முன்னாள் எம்பி டி.கே. சுரேஷ்) அழைத்திருந்தது. இதில், எந்தத் தவறும் இல்லை, அது எங்கள் (கட்சி) நிறுவனம் (நேஷனல் ஹெரால்டு, யங் இந்தியா), நாங்கள் காங்கிரஸ்காரர்கள், நாங்கள் அந்த நிறுவனத்தை ஆதரித்துள்ளோம், தலைமறைவாக தேவையில்லை.

டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்ய அவசியமில்லை

இது தொடர்பாக எனக்கு வேறு எதுவும் தெரியாது. அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு, டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. நாங்கள் வழக்கை எடுத்துக்கொள்வோம், நீதிமன்றத்தில் அதை எதிர்த்து போராடுவோம் என்று தெரிவித்தார். கடந்த நவம்பர் 29- ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 19-ஆம் தேதிக்குள் சிவகுமாரை நேரில் ஆஜராகுமாறு அல்லது கோரப்பட்ட தகவலை வழங்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

பண மோசடி தடுப்பு சட்டம்

இந்த நடவடிக்கையை துன்புறுத்தல் என்று அழைத்த துணை முதல்வர், இதில் என்ன இருக்கிறது? இது எங்கள் பணம், நாங்கள் வரி செலுத்தும்போது அதை யாருக்கும், நாம் விரும்பும் எவருக்கும் கொடுக்கலாம் என்று தெரிவித்தார். மேலும், இதில் எந்த சம்பந்தமும் இல்லை. ஏற்கனவே பணமோசடி தடுப்புச் சட்டம் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வரும் டிசம்பர் 19- ஆம் தேதி டி. கே. சிவக்குமார் ஆஜராவாரா என்று கேட்டதற்கு, சட்டரீதியான தாக்கங்களை ஆராய்வதாக பதிலளித்தார்.

மேலும் படிக்க: குனோ தேசிய பூங்காவில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு…என்ன காரணம்!