கடனாக கொடுத்த ரூ.2,000 பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. இளைஞர் குத்தி படுகொலை!
Man Killed For Asking to Return the Debt | டெல்லியில் தான் கடனாக கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்ட இளைஞர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாதிரி புகைப்படம்
டெல்லி, ஜூலை 11 : தலைநகர் டெல்லியில் (Delhi) கடனாக கொடுத்த ரூ.2,000 பணத்தை திருப்பி கேட்டதால், இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக பணம் தராமல் ஏமாற்றி வந்தவரிடம் இளைஞர் பணத்தை திருப்பி கேட்க சென்ற நிலையில், அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளைஞரை குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த நிலையில், கடனாக கொடுத்த ரூ.2,000 பணத்தை திருப்பி கேட்டதால் இளைஞர் கொலை செய்யப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடனாக கொடுத்த ரூ.2,000 பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம்
தலைநகர் டெல்லியில் உள்ள ஜப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் பர்தீன். இவர் அதே பகுதியை சேர்ந்த அடில் என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 2000 ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய அடிலோ, அதனை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (ஜூலை 10, 2025) அதிகாலை அடில் தனது நண்பருடன் தெருவில் நின்று கொண்டிருந்துள்ளார்.
கத்தி குத்தாக மாறிய வாக்குவாதம்
அப்போது அங்கு சென்ற பர்தீன், தான் கடனாக கொடுத்த ரூபாய் 2,000 பணத்தை திருப்பி தரும்படி அடிலிடம் கேட்டுள்ளார். அப்போது அடிலுக்கும் பர்தீனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அடியில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பர்தீனை சரமாரியாக குத்தி உள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த பர்தீன் பலத்த காயங்கலுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க : லிஃப்டில் சிறுவனை சரமாரியாக தாக்கி, கையை பிடித்து கடித்த நபர்.. ஷாக் சம்பவம்!
நடுரோட்டில் குத்தி படுகொலை செய்யப்பட்ட இளைஞர்
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி உள்ளனர். இந்த நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அடில் உள்ளிட்ட தப்பியோடிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.