கேரளாவில் கரை ஒதுங்கிய திமிங்கலம்.. பொதுமக்கள் உதவியுடன் மீண்டும் கடலில் விடப்பட்டது!
Kerala Whale Rescue | கேரள மாநிலம், கொல்லம் கடற்கரை பகுதியில் ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இந்த நிலையில், கடற்படை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் இணைத்து பொதுமக்கள் உதவியுடன் அந்த திமிங்கலத்தை மீண்டும் கடலுக்குள் அனுப்பியுள்ள சம்பவம் பாராட்டை பெற்று வருகிறது.
திருவனந்தபுரம், டிசம்பர் 10 : கேரள (Kerala) மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள பரவூர் கடற்கரையில் மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த மீனவர்களின் வலையில் ராட்சத திமிங்கலம் ஒன்று சிக்கியுள்ளது. பின்னர் அந்த திமிங்கலம் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. இதனை கண்டு அங்கிருந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அப்போது திமிங்கலம் உயிருடன் இருப்பதை கண்ட அவர்கள் அதனை எப்படியாவது காபாற்ற வேண்டும் என்பதற்காக அதனை மீண்டும் கடலுக்குள் தள்ள முயற்சி செய்துள்ளனர்.
கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்த பொதுமக்கள்
திமிங்கலத்தை மீண்டும் கடலுக்குள் தள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் முயற்சி செய்த நிலையில், அது அவர்களால் முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில் உடனடியாக அவர்கள் கடலோர காவல்படை மற்றும் வனத்துறைக்கு இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த கடற்படை மற்றும் வனத்துறை அதிகாரிகள் திமிங்கலத்தை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், திமிங்கலத்தை கடலுக்குள் தள்ளுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த திமிங்கலம் சுமார் 4 மணி நேரமாக கடற்கரையில் தவித்துள்ளது.
இதையும் படிங்க : உ.பியில் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துக்கொண்ட இளம் பெண்!
பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடலுக்குள் விடப்பட்ட திமிங்கலம்
கடற்கரைக்கு வந்த கடற்படை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் கடல் அலையின் வேகத்தை பயன்படுத்தி திமிங்கலத்தை கடலுக்குள் மீண்டும் தள்ளுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் தான், படகு மூலம் கயிறு கட்டி இழுக்கப்பட்டு திமிங்கலம் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உதவியால் இது சாத்தியமாகியுள்ளது.
இதையும் படிங்க : சபரிமலையில் ரோப் கார் சேவை விரைவில் தொடக்கம்…யார் யார் பயன்படுத்தலாம்!
பொதுவாக திமிங்கலம், சுறா போன்ற பெரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் ஆழ் கடல் பகுதியில் தான் இருக்கும். இந்த நிலையில், திமிங்கலம் கடற்கரையில் ஒதுங்கியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.