தலைதூக்கும் சைபர் மோசடி: ரூ.1,500 கோடி அபேஸ்.. பகீர் ரிப்போர்ட்!
Investors Lose Rs 1,500 Crore In Cyber Scams: இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் 30,000க்கும் அதிகமானோர் முதலீடு மோசடியில் ரூ.1,500 கோடி பணத்தை இழந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதையும் விட, அதிர்ச்சிகரமான தகவல் என்னவெனில், இந்த மோசடியில் சிக்கிய பலரும் நன்கு படித்தவர்கள் என்பதும், பெரும் நகரங்களை குறிவைத்தே இந்த மோசடிகள் அனைத்தும் நடந்துள்ளன என்பதே ஆகும்.

30,000க்கும் மேற்பட்டோர் முதலீட்டு மோசடிகளுக்கு ஆளாகியுள்ளனர்
நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் முக்கிய நகரங்களில் 30,000க்கும் மேற்பட்டோர் முதலீட்டு மோசடிகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்த மோசடி சம்பவங்கள் மூலம் சுமார் ரூ.1,500 கோடிக்கு மேல் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவின் அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக, இந்த மோசடிக்கு இலக்கு வைக்கப்பட்ட நபர்களில் பெரும்பாலானோர் 30-60 வயதுக்கு உட்பவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. சைபர் மோசடி குறித்து மக்களிடையே அரசு தரப்பில் எவ்வள்ளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
Also Read : ரகசிய ஆவணங்கள் பதுக்கல்.. இந்திய வம்சாவளி ஆலோசகர் கைது!
நடுத்தர வயதினரே இலக்கு:
இதுகுறித்து இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) அறிக்கையில், இந்த மோசடி பட்டியலில் பெங்களூரு நகரம் மிகப்பெரிய பண இழப்பை சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது மொத்த இழப்பில் கால் பங்கிற்கு அதிகமாக (26.38%) அந்நகரத்தில் நடந்துள்ளது. பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மட்டும் மொத்த மோசடியில் 65% குற்றங்கள் நடந்துள்ளன. அதோடு, இந்த மோசடியில் 30-60 வயதுடையவர்களே அதிகம் (76%) பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில், இந்த வயதில் உள்ளவர்கள் முதலீட்டில் அதிக ஆர்வமாக இருப்பார்கள் என்பதையறிந்து மோசடியாளர்கள் இதனை ஒரு யுக்தியாக கையாண்டு வந்துள்ளனர். அதற்கு பின் அவர்களின் இலக்கு மூத்த குடிமக்களாக்காக இருந்துள்ளனர். 30,000க்கும் மேற்பட்டோர் மோசடிக்கு ஆளான நிலையில், அதில் 2,829 (8.62) பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.
வாட்ஸ் அப், டெலிகாரம் மூலமே மோசடி:
சைபர் குற்றவாளிகள் இந்த மோசடிகளுக்கு பல்வேறு டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தினாலும், அதில் சமூக வலைத்தளங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும், வாட்ஸ் அப், டெலிகராம் மூலம் மட்டும் தோராயமாக 20%க்கும் அதிகமான மோசடிகள் அரங்கேறியுள்ளன. அதைத்தொடர்ந்து, பல செயலிகள், போலி வலைத்தளங்கள் மூலமாகவே 41.87% மோசடிகள் நடந்துள்ளன. இதனால், வாட்ஸ் அப், டெலிகராம் போன்ற செயலிகள் மூலமாக வரும் லிங்க்குகளை திறக்க வேண்டாம், விளம்பரங்களை நம்ப வேண்டாம் என சைபர் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
Also read: சைபர் மிரட்டல்.. ரூ.50 லட்சத்தை இழந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!
முதலீடு செய்ய விரும்பினால், நிதி நிபுணர்களுடன் கலந்தாலோசித்து நம்பகமான நிறுவனங்களிடம் இருந்து முதலீடு செய்ய வேண்டும். அதுவும் அதிக லாபம் தருவதாக யார் கூறினாலும் நம்ப வேண்டாம் என்கின்றனர் வல்லுநர்கள். அதோடு, ஒரே சமயத்தில் பெரும் தொகையை முதலீடு செய்ய வேண்டாம் என்றும், கொஞ்சம், கொஞ்சமாக நிதி ஆலோசகரின் ஆலோசனை படி முதலீடு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர்.