ரகசிய ஆவணங்கள் பதுக்கல்.. இந்திய வம்சாவளி ஆலோசகர் கைது!
Ashley Tellis: இந்திய வம்சாவளி அமெரிக்க ஆய்வாளர் ஆஷ்லே டெல்லிஸ், ரகசிய பாதுகாப்பு ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சீன அதிகாரிகளுடன் சந்திப்புகள் நடத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. வர்ஜீனியாவில் உள்ள அவரது வீட்டில் 1,000க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, அக்டோபர் 15: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய வெளியுறவுக் கொள்கை நிபுணர் ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஷ்லே டெல்லிஸ், ரகசிய பாதுகாப்பு ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகவும், சீன அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான விசாரணையின் போது வர்ஜீனியாவில் உள்ள அவரது வீட்டில் 1,000க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான தகவல்களை அணுகக்கூடிய உயர் ரகசிய பாதுகாப்பு அனுமதியைப் பெற்றுள்ள டெல்லிஸ், தற்போது வெளியுறவுத்துறையில் ஊதியம் பெறாத மூத்த ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.மேலும் பாதுகாப்புத் துறையின் நிகர மதிப்பீட்டு அலுவலகத்தின் ஒப்பந்த ஊழியராகவும் பணியாற்றி வருகிறார். ஆஷ்லே டெல்லிஸ் இந்தியா மற்றும் தெற்காசிய விவகாரங்களில் ஒரு மிகச்சிறந்த ஆலோசகராக கருதப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் டெல்லிஸ் சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட்டில் ஒரு மூத்த உறுப்பினராக உள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருத்துகளுக்கு 100% வரி – அதிபர் டிரம்ப் அடுத்த அதிரடி..
ஆஷ்லே டெல்லிஸ் சட்டவிரோதமாக அரசின் ரகசிய தேசிய பாதுகாப்பு ஆவணங்களை வைத்திருந்ததாகவும், சீன அரசு அதிகாரிகளுடன் பல சந்திப்புகளை நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அக்டோபர் 11 ஆம் தேதி வர்ஜீனியா மாவட்ட நீதிமன்ற அனுமதியின்பேரில் நடந்த சோதனையின் போது, ஆஷ்லேவின் வியன்னாவில் உள்ள வீட்டில், FBI சிறப்பு அதிகாரிகள் 1,000 பக்கங்களுக்கு மேல் ரகசியம் என்று பெயரிடப்பட்ட ஆவணங்களை கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டின் அடித்தளத்தின் அமைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் பூட்டப்பட்ட அலமாரிகளில் மூன்று பெரிய கருப்பு குப்பைப் பைகளுக்குள் இந்த ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ஆஷ்லே டெல்லிஸ்?
64 வயதான ஆஷ்லே டெல்லிஸ் மும்பையைச் சேர்ந்தவர். இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்கு முன்பு, மும்பை பல்கலைக்கழகத்தின் செயிண்ட் சேவியர் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை முடித்தார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் சிறப்பு உதவியாளராக தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றினார். மேலும் மூலோபாய திட்டமிடல் பிரிவு மற்றும் தென்மேற்கு ஆசியாவிற்கான மூத்த இயக்குநராக பணியாற்றியது என பல முக்கிய பதவிகளை ஆஷ்லே டெல்லிஸ் வகித்துள்ளார். அவர் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதராக பதவி வகித்தவருக்கு மூத்த ஆலோசகராகவும் பணியாற்றினார்.
இதையும் படிங்க: கழிவறையில் ரகசிய கேமரா.. 13,000 வீடியோக்களை எடுத்ததாக வாக்குமூலம்.. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது!
இந்தியா பற்றி கணிக்கும் அமெரிக்காவின் முன்னணி நிபுணர்களில் ஒருவராக ஆஷ்லே டெல்லிஸ் கருதப்பட்டார். 2000ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் அமெரிக்க-இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை எட்டப்பட்டபோது அதற்கான நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.