2030ல் இந்தியாவுக்கு தண்ணீர் பற்றாக்குறை அபாயம்: சர்வதேச ஆய்வு எச்சரிக்கை
Water Crisis Threat in India: 2030ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை உயர்வால் நீர் தேவை இரு மடங்கு அதிகரிக்கும் நிலை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது 744 மில்லியன் அளவிலேயே நீர் வழங்கல் சாத்தியம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா தண்ணீர் பற்றாக்குறை
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கும் நிலையில் தண்ணீர் பிரச்னை மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் இது மாநில அளவிலான பிரச்னை மட்டுமல்ல என்பது கவனிக்கப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை என்பது உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக 2030ம் ஆண்டில் இந்தியா கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும் என்று சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலக தட்பவெப்ப மாற்றம் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு இந்த நெருக்கடியை தீவிரப்படுத்தும் காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேவையும் வழங்கலும் இடையிலான பெரும் இடைவெளி
இந்தியாவிற்கு தற்போது சுமார் 700 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 85 சதவீதம் விவசாய உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. 2030ம் ஆண்டில் மக்கள் தொகை 160 கோடியிலிருந்து 170 கோடி வரை உயரும் என கணிக்கப்படுகிறது. அப்போது தண்ணீர் தேவை 1,498 பில்லியன் கியூபிக் மீட்டராக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழங்கல் 744 மில்லியன் கியூபிக் அளவிலேயே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தேவையில் பாதியளவே கிடைக்கும் சூழல் உருவாகும் என்பதால் நெருக்கடி தீவிரமாவது உறுதியாகக் கூறப்படுகிறது.
Also read: இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா?.. அதிகாரிகள் கூறுவது என்ன?
நிலத்தடி நீர்மட்டம் கவலைக்கிடம்
இந்தியாவின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளது. குறிப்பாக வடஇந்திய விவசாய பகுதிகளில் அதிகளவில் நீர் எடுக்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விவசாயத்தை முதன்மையாக நம்பும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருப்பதால் தண்ணீர் பற்றாக்குறை உணவு உற்பத்தியை நேரடியாக பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நீர்வள கமிஷன் கணிப்பின்படி தற்போதைய 634 மில்லியன் கியூபிக் லிட்டர் தேவை, 2030ம் ஆண்டுக்குள் 1,123 மில்லியன் கியூபிக் லிட்டராக உயரும்.
உணவு பாதுகாப்பு மற்றும் இறக்குமதி அபாயம்
விவசாய உற்பத்தி குறைந்தால் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு உருவாகும் சூழல் நிலவும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அப்படியான நிலை உருவானால் வெளிநாடுகளில் இருந்து அதிக விலைக்கு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இது நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் மற்றும் ஒன்றிய நீர்வள கமிஷன் மதிப்பீடுகளில் கணக்கீட்டு வேறுபாடு இருந்தாலும், தண்ணீர் நெருக்கடி மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
3% மட்டுமே நன்னீர்
பூமியின் 70 சதவீதம் நீரால் மூடப்பட்டுள்ளது. அதில் பெரும்பகுதி பனிப்பாறைகள் மற்றும் பயன்பாட்டிற்கு எட்டாத இடங்களில் உள்ளது. மொத்த நீரில் 3 சதவீதம் மட்டுமே நன்னீராக உள்ளது. உலகளவில் 1.1 பில்லியன் மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். ஆண்டுக்கு 2.7 பில்லியன் மக்கள் குறைந்தது ஒரு மாதமாவது போதிய தண்ணீர் இல்லாமல் வாழ வேண்டிய நிலை நிலவுகிறது. 50 சதவீத நீர்நிலைகள் தற்போது வறண்ட நிலையில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அலட்சியம் தொடர்ந்தால் அபாயம்
இந்தியா நீர்வளம் குறைந்த நாடு அல்ல என்றாலும், நீர்வள மேலாண்மையில் அலட்சியம் காரணமாக பிரச்னை தீவிரமடைந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தண்ணீர் பிரச்னை அதிகமுள்ள பகுதிகள் பல முரண்பாடுகள் நிலவும் மண்டலங்களில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தண்ணீர் காரணமாக சமூக மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மழைநீர் சேமிப்பு, குளங்கள் மற்றும் ஏரிகள் உருவாக்கம், அணைகள் கட்டுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.