ஒடிசாவில் செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா – தொழில்நுட்ப துறையில் மாபெரும் முன்னேற்றம்
இதுவரை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த அதிநவீன சிப் தொழில்நுட்பம், இப்போது இந்தியாவிலேயே உருவாக தொடங்கியுள்ளது. நாட்டின் முதலாவது அதிநவீன 3D சிப் பேக்கேஜிங் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, ஏப்ரல் 20, 2026 அன்று புவனேஸ்வரில் உள்ள 'இன்ஃபோ வேலி வளாகத்தில் நடைபெற்றது.

நாட்டின் முதலாவது அதிநவீன 3D சிப் பேக்கேஜிங் மையம்
இந்தியாவை உலக அளவில் செமி கண்டக்டர் மையமாக மாற்றும் லட்சிய நோக்கத்தின் ஒரு பகுதியாக, ஒடிசா மாநிலம் ஒரு மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இணைந்து, புவனேஸ்வரில் உள்ள இன்ஃபோ வேலியில் நாட்டின் முதலாவது அதிநவீன 3D சிப் பேக்கேஜிங் மையத்திற்கு அடிக்கல் நாட்டினர். ‘ஆத்மநிர்பர் பாரத் எனும் தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இத்திட்டம், அதிநவீன மின்னணு உற்பத்தித் துறையில் ஒடிசாவை ஒரு உலக அளவிலான மையமாக நிலைநிறுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகத் திகழ்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘3D Glass Solutions’ நிறுவனம், தனது துணை நிறுவனமான ‘Heterogeneous Integration Packaging Solutions’ வாயிலாக இந்த ஆலையை அமைத்து வருகிறது.
அதிநவீன தொழில்நுட்பம்
இத்திட்டத்தில் சுமார் ரூ.1,943.53 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இம்முயற்சிக்கான நிதி உதவி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு ரூ.799 கோடியும், மாநில அரசு ரூ.399.5 கோடியும் பங்களிக்கின்றன. ஆண்டுதோறும் 70,000 கண்ணாடி பேனல்கள், 5 கோடி ஒருங்கிணைக்கப்பட்ட அலகுகள் (assembled units) மற்றும் 13,000 அதிநவீன ‘3DHI மாடல்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த ஆலை வாயிலாக, பொறியியல் பட்டதாரிகள் மட்டுமின்றி, ITI மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கும் ஆயிரக்கணக்கான உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன. ஆகஸ்ட் 2028-க்குள் வணிக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்குவதும், 2030-க்குள் முழு அளவிலான பெருமளவு உற்பத்தியை அடைவதும் இத்திட்டத்தின் இலக்காகும்.
இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மாஜி, “Intel மற்றும் Lockheed Martin போன்ற உலக நிறுவனங்கள் பயன்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பம், இப்போது ஒடிசாவிற்குச் சொந்தமாகியிருப்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகும் என்று குறிப்பிட்டார். மேலும், “செயற்கை நுண்ணறிவு பாதுகாப்புத் துறை மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய துறைகளில் ஒடிசாவின் தயாரிப்புகள் முக்கியப் பங்கு வகிக்கும்,” என்றும் அவர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், “கடந்த 12 ஆண்டுகளில், மின்னணுப் பொருட்களின் உற்பத்தி ஆறு மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியா தற்போது உலகின் இரண்டாவது மிகப்பெரிய அலைபேசி உற்பத்தி நாடாகத் திகழ்கிறது. ஒடிசா மாநிலம் தற்போது ‘கனிவள மாநிலம்’ என்பதிலிருந்து ‘தொழில்நுட்ப மாநிலம்’ என்ற நிலைக்கு உருமாறி வருகிறது,” என்று குறிப்பிட்டார். மேலும், ‘இன்டெல்’ (Intel) நிறுவனத்தைப் போலவே, வேறு பல சர்வதேச நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
ரயில்வே மேம்பாட்டில் சிறப்பு கவனம்
அதே மேடையில் பேசிய வைஷ்ணவ், ஒடிசா மாநிலத்தின் ரயில்வே உள்கட்டமைப்பு தொடர்பான முக்கிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். அம்மாநிலத்தில் தற்போது ₹90,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ‘அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின்’ கீழ் 59 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மாநிலத்தின் அனைத்து 30 மாவட்டங்களுக்கும் ரயில்வே இணைப்பு கிடைப்பதை உறுதி செய்வதே இதன் முதன்மையான நோக்கம் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.