ஏடிஎம் மையங்கள் 3 நாட்கள் செயல்படாதா?.. மத்திய அரசு கூறுவது என்ன?

ATM Closure Rumors Debunked by Government | இந்தியா - பாகிஸ்தான் மோதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பாகிஸ்தானின் ரேன்சம்வேர் தாக்குதல் காரணமாக இந்தியாவில் மூன்று நாட்கள் ஏடிஎம் மையங்கள் செயல்படாது என தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஏடிஎம் மையங்கள் 3 நாட்கள் செயல்படாதா?.. மத்திய அரசு கூறுவது என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

09 May 2025 17:02 PM

சென்னை, மே 09 :  இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் மூன்று நாட்களுக்கு ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மையங்கள் இயங்காது என்ற தகவல்கள் பொய்யானவை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் அசாதாரன சூழல் காரணமாக ஏடிஎம் மையங்கள் இயங்காது என சமூக ஊடகங்களில் போலி தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அரசு இவ்வாறு கூறியுள்ளது. அரசு மட்டுமன்றி, பொதுத்துறை வங்கிகளும் இதுதொடர்பான விளக்கத்தை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்

பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டு படுகொலை செய்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூரை (Operation Sindoor) இந்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து இந்திய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு பதில் அளித்து பாகிஸ்தான் அரசும் தாக்குதல் நடத்தி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதன் காரணமாக சமூக ஊடகங்களில் பொய் தகவல்கள் அதிகம் பரவி வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தான் ரான்சம்வேர் என்ற வைரஸ் மூலம்  சைபர் தாக்குதல் நடத்துவதால் 2 முதல் 3 நாட்களுக்கு இந்தியாவில் ஏடிஎம் மையங்கள் மூடப்படுவதற்காக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த தகவல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இத்தகைய பொய் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

போலி தகவல்களை நம்ப வேண்டாம் – மத்திய அரசு

இந்த நிலையில் இது குறித்து கூறியுள்ள மத்திய அரசு, சமூக ஊடகங்களில் பரவு இத்தகைய செய்திகள் பொய்யனவை என்றும் ஏடிஎம் மையங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, பொதுமக்கள் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளது. இதற்கிடையே ஏடிமெம் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் (Digital Transaction) வழக்கம் போல செயல்படும் என பொதுத்துறை வங்கிகள் உறுதி அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.