2 பிள்ளைகளை ஆற்றில் தள்ளி கொலை செய்த தந்தை.. தானும் தற்கொலை!
Father Killed Two of His Children | ஹைதராபாத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை ஆற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். பிறகு அவரும் அதே ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலியான மூன்று பேர்
ஹைதராபாத், நவம்பர் 19 : தெலங்கானா (Telangana) மாநிலம், கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த மாளிகைபுரம் பகுதியை சேர்ந்தவர் துர்கபிரசாத். 37 வயதாகும் இவர், நாகவேணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு 13 வயதில் மோகித் என்ற மகனும், ஜான்வி என்ற 9 வயது மகளும் இருந்துள்ளனர். மனைவி மற்றும் பிள்ளைகள் ஊரில் வசித்து வந்த நிலையில், துர்கபிரசாத் குவைத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
பிள்ளைகளை ஆற்றில் தள்ளி கொலை செய்த நபர் தானும் தற்கொலை
குவைத்தில் இருந்து சொந்த ஊருக்குக்கு திரும்பிய துரக்பிரசாத், இன்று (நவம்பர் 19, 2025) தனது இரண்டு பிள்ளைகளையும் லக்காவரம் பகுதியில் உள்ள கோதாவரி ஆற்று பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர் தனது இரண்டு பிள்ளைகளையும் முதலில் ஆற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். பிறகு தானும் அதே ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : உபி கல்குவாரி விபத்து.. 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 8 பேரின் உடல்கள் கைவிடப்பட்டது!
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை
துர்கபிரசாத் தனது பிள்ளைகளை ஆற்றில் தள்ளிவிட்டு, பிறகு தானும் ஆற்றில் குதித்ததை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பார்த்துள்ளார். இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அவர், உடனடியாக அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு துறையின் உதவியுடன் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : மருத்துவரின் பரிந்துரை சீட்டு கட்டாயம்.. இருமல் மருந்து விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு?
பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடல்கள்
இரண்டு பிள்ளைகள் மற்றும் அவரது தந்தையின் உடல் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மூவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், துர்கபிர்சாத் தனது இரண்டு பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தை தனது இரண்டு பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.