மருத்துவரின் பரிந்துரை சீட்டு கட்டாயம்.. இருமல் மருந்து விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு?
Cough Syrups: தற்போது மருந்தாளுநர் உரிமம் இல்லாத சிறு கடைகளிலும் இருமல் மருந்துகள் விற்பனை செய்ய முடிகிறது. ஆனால் இருமல் மருந்துகள் அட்டவணை ‘K’-யிலிருந்து நீக்கப்பட்டால், இந்த தளர்வு முடிவுக்கு வரும். அப்போது, உரிமம் பெற்ற மருந்தகங்களில் மட்டுமே விற்பனை என்று தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவர்கள் பரிந்துரையின்றி இருமல் மருந்துகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மத்திய மருந்து ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுநீரக செயழிப்பு காரணமாக பலியான இந்த துயரத்திற்கு பிறகு, அந்த மருந்தை தயாரித்த மருந்து நிறுவனமும், அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் மருந்து கலவையில் Diethylene Glycol (DEG) எனும் ஆபத்தான தொழில்துறை இரசாயனம் அதிக அளவில் கண்டறியப்பட்டதாக ஆய்வக அறிக்கைகள் வெளிப்படுத்தின. ஒரு தொகுப்பில் 0.1% அனுமதிக்கப்படும் நிலையில், 48.6% DEG இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிக்க : டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகள் பயன்படுத்திய ‘டெட் டிராப்’ இ-மெயில்.. வெளியான திடுக் தகவல்!!
WHO விடுத்த எச்சரிக்கை:
இந்தச் சம்பவத்தை அடுத்து உலக சுகாதார நிறுவனம் (WHO) அவசர மருந்து எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது. அதி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளான Coldrif, Respifresh TR, ReLife ஆகிய மூன்றும் உயர் விஷத்தன்மை கொண்டுள்ளதாக அறிவித்தது. பல மாநிலங்கள் உடனடியாக இந்த மருந்துகளைத் தடை செய்தன; மேலும் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளை கொடுக்க வேண்டாம் என அறிவுரைகள் வெளியிட்டன.




அட்டவணை ‘K’ல் இருந்து நீக்க கோரிக்கை:
இந்த சூழலில், இருமல் மருந்துகள் தற்போது இருக்கும் அட்டவணை ‘K’ ( Schedule K) (குறைந்த அபாயம் கொண்ட மருந்துகள்) பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்த அட்டவணையில் உள்ள மருந்துகளை யார் வேண்டுமானாலும் பரிந்துரை சீட்டு இல்லாமல் வாங்க முடியும். இதுவே பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதாக மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் கருதுகிறது.
புதிய மருந்து பிரிந்துரை:
இதனால், மத்திய மருந்து ஆலோசனை குழு புதிய பரிந்துரைகளை மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. இதில், இருமல் மருந்துகளுக்கு மருத்துவர் பரிந்துரை சீட்டு கட்டாயம், உரிமம் பெற்ற மருந்தகங்களில் மட்டுமே விற்பனை, மேம்பட்ட தர நிர்வாக கண்காணிப்பு, குழந்தைகள் பயன்பாட்டில் தனித்தனி பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடுமையான ஆய்வு நடைமுறைகள் போன்ற மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டள்ளன.
உரிமையில்லாமல் விற்க முடியாது:
அதன்படி, அட்டவணை ‘K’-யிலிருந்து இருமல் மருந்துகள் நீக்கப்பட்டால், சாதாரண கடைகளில் விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும். மருந்தாளுநர் உரிமை இல்லாதவர்கள் விற்க முடியாது. சுங்க கண்காணிப்பு, தர சோதனை, பாதுகாப்பு மதிப்பாய்வு ஆகியவை மேலும் கடுமையாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் திருப்பம்… உமர் நபியின் நண்பரை கைது – கார் பறிமுதல்
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், இந்தியாவின் மருந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரம் காரணமாக இருமல் மருந்துகளுக்கான விதிகள் தேசிய அளவில் விரைவில் கடுமையாக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.