‘டிஜிட்டல் கைது’ மோசடி; ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ.32 கோடி அபேஸ்!!
digital-arrest scam: இந்த ஆறு மாதங்களில், அவர்கள் சொன்ன பல வங்கி கணக்குகளுக்கு அந்தப் பெண் தொடர்ந்து பணத்தை டிரான்ஸ்வர் செய்து வந்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் தன்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் திடீரென காணாமல் போனதும், அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

மாதிரிப் படம்
கர்நாடகா, நவம்பர் 18: பெங்களூருவை சார்ந்த 57 வயதான மூத்த பெண் ஐடி ஊழியர், “டிஜிட்டல் அரெஸ்ட்” மோசடியில் சிக்கி ரூ.31.83 கோடி இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசடியாளர்கள் தங்களை சர்வதேச டெலிவரி நிறுவனமான DHL ஊழியர்கள் என்றும், பின்னர் சிபிஐ அதிகாரிகள் எனவும் கூறி பயமுறுத்தியுள்ளனர். ஐடி துறையில் பெரும் பதவியில் இருக்கும் பெண், அரசும், காவல்துறையும் அவ்வளவு வழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தும், சர்வ சாதாரணமாக சைபர் மோசடிக்கு ஆளான சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதையும் விட, குறிப்பாக இந்த மோசடி சம்பவத்தில் ரூ.32 கோடியை வங்கி கணக்கில் சாதாரணமாக வைத்திருக்க முடிந்த பெண் யார்?” என்ற கேள்விதான் சமூக வலைதளங்களில் பெரும் விவதமாகி உள்ளது.
போதைப்பொருள் பார்சல்:
பெங்களூரு இந்திரா நகரில் வசித்து வரும் அப்பெண் ஐடி நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு செப்.15ம் தேதி அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அந்த போன் காலில் இருந்து தான் மொத்த பிரச்சனையும் தொடங்கியுள்ளது. அந்த போனில் பேசிய நபர், மும்பையில் உள்ள DHL கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் வந்த பார்சலில் சிம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், போலி பாஸ்போர்ட்கள், போதைப் பொருட்கள் இருந்ததாகவும் அதனை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம்.. வீதியையே இருட்டாக்கிய இளைஞர்!
சிபிஐ அதிகாரிகள் பேசுவதாக மோசடி:
முதலில் இதனை ஏற்காத அப்பெண், அது தனக்கு வந்த கொரியர் இல்லை என்று கூறி அழைப்பை துண்டிக்க முயற்சித்துள்ளார். ஆனால், உஷாரான கொள்ளை கும்பல், உடனடியாக அழைப்பை சிபிஐ அதிகாரிகளுக்கு இணைப்பதாக கூறியுள்ளனர். அப்போது சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி பேசிய நபர்கள், நீங்கள் இக்குற்றத்தில் ஈடுபடவில்லை என்றாலும், வேறு சிலர் தங்களை இதில் சிக்க வைப்பதாக கூறி அச்சமடைய செய்துள்ளனர்.
உதவி செய்வது போல் மோசடி:
அதோடு, உண்மையான குற்றாவாளிகள் உங்களைக் கண்காணித்து வருவதாகவும், உங்கள் குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறி நம்ப வைத்துள்ளனர். அதோடு, இவ்விவகாரம் குறித்து போலீசாரையோ, வழக்கறிஞரையோ அணுகக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். தனது மகனின் திருமணம் நெருங்கி வருவதால், அப்பெண்ணும் பீதியடைந்து, அவர்கள் சொல்வதற்கு இணங்கி செயல்பட்டுள்ளார். தொடர்ந்து, அப்பெண்ணின் சொத்து விவரங்கள், வங்கி இருப்பு குறித்த தகவல்களை பெற்றுக்கொண்ட மர்மகும்பல், ஸ்கைப்பில் எப்போதும் வெப் கேமராவை ஆனிலேயே வைத்து தங்களுடன் தொடர்பிலேயே இருக்க வேண்டும், இணைப்பை துண்டிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.
6 மாதங்களாக வீடியோ காலில் கண்காணிப்பு:
இந்த விவகாரம் குறித்து வெளியே தெரிந்தால் அப்பெண்ணுடன், மொத்த குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று மிரட்டியுள்ளனர். இப்படி, கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 6 மாதங்களாக சுமார் ரூபாய் 32 கோடி பணத்தை அப்பெண்ணிடம் இருந்து பறித்துள்ளனர். இக்குற்ற வழக்குகளி்ல் இருந்து விடுபடவே சொத்து விவரங்களை கேட்பதாக, விவரங்களை பெற்றுள்ளனர். அதேசமயம், இப்பணத்தை வழக்கு முடிந்த பிறகு திருப்பி அளித்துவிடுவோம் என்று அவருக்கு நம்பிக்கை ஏற்படுத்தியே பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க : டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகள் பயன்படுத்திய ‘டெட் டிராப்’ இ-மெயில்.. வெளியான திடுக் தகவல்
நீண்ட போராட்டதிற்கு பின் இறுதியாக, அப்பெண் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயலில் ஈடுபடவில்லை என்று சான்றிதழ் வழங்கி மர்மநபர்கள் அவரை நம்ப வைத்துள்ளனர். எனினும், பணத்தை அவர்கள் திரும்ப தராத போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்த நிலையில் விசாரணை நடந்து வருகிறது.
சமூக வலைதளங்களில் விவாதம்:
இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதமும் எழுந்துள்ளது. ரூ.32 கோடியை சம்பாதிக்கும் அளவுக்கு அறிவார்ந்த அப்பெண், அதனை ஏன் தக்க வைத்துக்கொள்ளும் தெளிவுடன் இல்லை என்றும், 32 கோடி பணத்தை வங்கிக் கணக்கில் எதற்கும் பயன்படுத்தாமல், சும்மா வைத்திருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.