குடியரசு தின நிகழ்ச்சி…போர் விமானங்கள் மீது பறவைகள் மோதுவதை தடுக்க 1,275 கிலோ கோழி இறைச்சி வீசும் நிகழ்வு!
Delhi Republic Day Celebrations: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவின்போது, சாகச நிகழ்ச்சியில் ஈடுபடும் போர் விமானங்கள் மீது பறவைகள் மோதாமல் இருப்பதற்காக இந்திய விமானப்படையுடன் இணைந்து, வனத்துறை முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில், 1275 கிலோ கோழி இறைச்சிகளை வானில் வீச உள்ளனர்.

டெல்லியில் கோழி இறைச்சி வீசும் நிகழ்வு
இந்தியாவில் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி ( திங்கள் கிழமை) குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக டெல்லியில் கர்தவ்ய பாதையில் இந்திய விமான படையின் வான்வழி காட்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் போது, பெரிய அளவிலான ராப்டர்கள், ரஃபேல் மற்றும் சுகோய் 30 எம் கே ஐ ரக போர் விமானங்கள் வானில் தாழ்வாக பறந்து பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும். இந்த மாதிரியான போர் விமானங்கள் குறைந்த அளவிலான உயரத்தில் பறக்கும் போது, அந்த வழியாக பறந்து வரும் பறவைகள் போர் விமானங்கள் மீது மோதும் நிலை உள்ளது. இதனால், போர் விமானங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, இந்த ஆபத்தை தவிர்க்கும் வகையில், இந்திய விமான படையுடன் இணைந்து, டெல்லி வனத்துறை ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வானில் கோழி இறைச்சிகள் வீச்சு
அதன்படி, பறவைகளின் இடையூறை தவிர்ப்பதற்காக வானில் எலும்புகள் நீக்கப்பட்ட கோழி இறைச்சிகளை வீசுவதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதனால், அந்த பறவைகள் இறைச்சிகளை உண்பதற்காக வேறு திசையில் பயணிக்கும். இதனால், வானில் சாகச நிகழ்ச்சியில் ஈடுபடும் போர் விமானங்களுக்கு பறவைகளால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க முடியும். இதற்காக, விமானப்படை விமானங்கள் சாகசம் மேற்கொள்ளும் பகுதிகளுக்கும் முன்னதாக, சுமார் 20 இடங்களில் பறவைகளுக்கான இறைச்சிகள் வீசப்பட உள்ளன.
மேலும் படிக்க: Indian Open Badminton 2026: போட்டிக்கு நடுவே புறா எச்சம்! இந்தியன் ஓபனில் தொடரும் சர்ச்சை.. போட்டி பாதியில் நிறுத்தம்!
எருமை இறைச்சிக்கு பதிலாக கோழி இறைச்சி
இந்த நடவடிக்கையில், சுமார் 20 முதல் 30 கிராம் இடையிலான எலும்புகள் நீக்கப்பட்ட கோழித் துண்டுகள் வீசப்பட உள்ளன. இந்த இறைச்சியை வீசும் நடை முறை ஆண்டு தோறும் நடைபெறும் ஒரு பாரம்பரிய நிகழ்வாக இருந்து வருகிறது. இருந்தாலும், முந்தைய ஆண்டுகளில், எருமை மாடுகளின் இறைச்சிகள் வீசப்பட்டு வந்த நிலையில், தற்போது, ஆண்டு புதிய நடை முறையாக கோழி இறைச்சிகள் வீசப்பட உள்ளன. வனவிலங்கு மேலாண்மையை நடை முறைகளுடன் சிறப்பாக சம நிலைப்படுத்த இந்த மாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1275 கிலோ கோழி இறைச்சிகள்
இதற்காக மொத்தம் 1275 கிலோ கோழி இறைச்சிகள் வஜிராபாத்தில் உள்ள வனவிலங்கு மீட்பு மையத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. இதேபோல, ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறும் முழு ஆடை ஒத்திகை நிகழ்ச்சியின் போது, 255 கிலோ இறைச்சி வீசப்பட உள்ளது. பறவைகள் நடமாட்டம் குறித்த பல ஆண்டுகால தரவுகளின் அடிப்படையில், உணவளிக்கும் இடங்களான செங்கோட்டை, ஜமா மசூதி, மண்டி ஹவுஸ், டெல்லி கேட் உள்ளிட்ட இடங்களில் இறைச்சிகள் வீசப்பட உள்ளது.
மேலும் படிக்க: பாகிஸ்தான் டிரான்கள் மீது இந்திய ராணுவம் குறிவைத்து தாக்குதல்… பரபரப்பு தகவல்