மூளை வயதை 1.6 ஆண்டுகள் அதிகரிக்கும் செயற்கை இனிப்புகள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Research Warning : செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள் மூளை செயல்பாடுகளை கடுமையாக பாதிக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்ட உணவுகள் நினைவாற்றலை பாதிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான பொருட்களில் செயற்கை இனிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை வழக்கமான இனிப்பு போல் அல்லாமல் தனித்துவமான சுவையை அந்தப் பொருட்களுக்கு வழங்குகின்றன. ஆனால் இவை நீரிழிவு நோய் (Diabetic) போன்ற உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இவை வழக்கமான இனிப்புகளை விட உடல்நலத்தை மோசமாக பாதிக்கக் கூடியது. இந்த நிலையில் இவை மூளை (Brain) செயல்பாடுகளை பாதிக்கும என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக செயற்கை இனிப்புகள் மூளையின் நினைவாற்றல் மற்றும் வார்த்தைகளை நினைவுகூறும் திறன் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கக் கூடும் என தெரியவந்துள்ளது.
மூளை வயதாவதை வேகப்படுத்தும்
நியூராலஜி என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வின் படி அதிக அளவு செயற்கை இனிப்புகளை உட்கொள்ளும் நபர்களின் நினைவாற்றல் 62 சதவிகிதம் குறைந்தது. இது 1.6 ஆண்டுகள் மூளை வயதாவதற்கு சமமானது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஒரு நபர் சராசரியாக தினமும் 191 மில்லி கிராம், அதாவது சராசரியாக ஒரு டீஸ்பூன் இனிப்புகளை எடுத்துக்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி, ஒரு டயட் சோடா டின்னில் 200 முதல் 300 மில்லிகிராம் வரை இனிப்பு உள்ளது.
இதையும் படிக்க : மூளையை உண்ணும் அமீபா என்றால் என்ன..? இது உண்மையில் மூளையை சாப்பிடுமா..?
இதற்காக ஆராய்ச்சியாளர்கள் பிரேசில் நாட்டில் உள்ள சுமார் 13,000 பேரின் உணவு பழக்கங்கள் மற்றும் மருத்துவ விவரங்களை 8 ஆண்டுகள் கவனித்து வந்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் சராசரி வயது 52 ஆகும்.
எந்த உணவுகளில் அதிகம் செயற்கை இனிப்புகள் பயன்படுத்தப்படுகிறது?
இந்த செயற்கை உணவுகள் டயட் சோடாக்களில் மட்டுமல்லாமல், ஃபிளேவர்டு வாட்டர், கடைகளில் விற்கப்படும் இனிப்புகள், எனர்ஜி டிரிங்க்ஸ் போன்றவற்றில் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.
செயற்கை இனிப்புகள் அதிக அளவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு மட்டுமல்லாமல், குறைவான அளவில் எடுத்துக்கொள்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறைவான அளவில் செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்ட உணவை எடுத்துக்கொள்பவர்களுக்கு 35 சதவிகிதம் வேகமான நினைவாற்றல் குறைவு ஏற்படும் என ஆய்வில் கண்டுபடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சராசரியாக 1.3 ஆண்டுகள் மூளை முதிர்ச்சியடையும் என ஆய்வு கூறுகிறது.
இதையும் படிக்க : எடையை குறைக்க கடுமையாக டயட் பிளானா..? அதிகரிக்கும் இதய நோய் ஆபத்துகள்!
நீரிழிவு அபாயமும் அதிகம்
இதற்குமுன், ஆஸ்திரேலியாவில் நடந்த ஆய்வு ஒன்றில், ஒரு டயட் சோடா டினை மட்டும் குடித்தாலே, டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 38% அதிகரிக்கும் என கண்டறியப்பட்டது. ஆச்சரியமாக, இது சாதாரண சர்க்கரை பானங்களைவிட (23% அபாயம்) அதிகமான ஆபத்தாகும் எனவும் தெரியவந்தது.
இதனால், இனிப்புச் சேர்விகள் உடல் எடையை குறைக்க உதவும் என்ற எண்ணம் இருந்தாலும், உண்மையில் அவை மூளை ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும் என்பதில் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மொத்தத்தில் டயட் சோடா போன்ற செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.