Brain Eating Amoeba: மூளையை உண்ணும் அமீபா என்றால் என்ன..? இது உண்மையில் மூளையை சாப்பிடுமா..?
Kerala's Deadly Amoeba: கேரளாவில் 'மூளை உண்ணும் அமீபா' எனப்படும் நெய்க்லேரியா ஃபோலேரி காரணமாக 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமீபா மாசுபட்ட நீரில் வளர்ந்து, மூக்கின் வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையை பாதிக்கிறது.

மூளையை உண்ணும் அமீபா
கேரளாவிலிருந்து கடந்த சில நாட்களாக மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், மூளையை உண்ணும் அமீபா (Brain-Eating Amoeba) என்ற ஆபத்தான உயிரினத்தால் 9 வயது சிறுமி கேரளாவில் (Kerala) உயிரிழந்தார். இந்த உயிரினத்தின் அறிவியல் பெயர் நெய்க்லேரியா ஃபோலேரி (Naegleria fowleri) என்று அழைக்கப்படுகிறது. இந்த அமீபாவானது ஏரிகள், சுத்தம் செய்யப்படாத நீச்சல் குளங்கள் அல்லது குளம் போன்றவற்றில் வேகமாக வளரும். எனவே, கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அமைச்சகம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி வருகிறது. இந்தநிலையில், மூளையை உண்ணும் அமீபா என்றால் என்ன, இது எப்படி மனித உடலுக்குள் செல்கிறது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
மூளையை உண்ணும் அமீபா எப்படி மனித உடலுக்குள் செல்கிறது..?
மூளையை உண்ணும் அமீபா என்பது மூக்கின் துவாரங்கள் வழியாக நேரடியாக உடலுக்குள் நுழையும் ஒரு நுண்ணிய உயிரினமாகும். இது மூக்கில் நுழைந்தவுடன், அது நேரடியாக இரத்தத்தின் வழியாக மூளைக்குச் சென்று மூளை செல்களை அழிக்கத் தொடங்குகிறது. இது முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் எனப்படும் தொற்றுநோயை ஏற்படுத்துகிறது. இந்த தொற்று மிகவும் ஆபத்தான கருதப்படுகிறது. மேலும், சில நேரங்களில் இது நோயாளியின் மரணத்தையும் ஏற்படுத்துகிறது.
ALSO READ: இரவு உணவை தாமதமாக சாப்பிடுகிறீர்களா? காத்திருக்கும் நோய்களின் ஆபத்து
இதன் அறிகுறிகள் என்ன..?
மூளையை உண்ணும் அமீபா நோய்த்தொற்றின் ஆரம்ப அறிகுறிகளானது முதலில் சாதாரண சளி அல்லது காய்ச்சலைப் போலவே வரும். இதனுடன் கடுமையான தலைவலி, காய்ச்சல், வாந்தி, கழுத்து இறுக்கம் மற்றும் சோர்வு ஆகியவை அடுத்தடுத்து வர தொடங்கும். தொற்று வளரும்போது நோயாளிக்கு வலிப்பு ஏற்படத் தொடங்கி, தேவையில்லாத குழப்பமான செயல்களை உண்டாக்கும். இதுமட்டுமின்றி, கோமா நிலைக்கு கொண்டு செல்கின்றன. இதனை தொடர்ந்து, நோயாளி சில நாட்களுக்குள் இறந்துவிடும் சூழ்நிலையை உண்டாக்கும்.
இந்த நோய்க்கு நிரந்தர சிகிச்சை என்பது கிடையவே கிடையாது. அதன்படி, சிகிச்சை அளிப்பது என்பது மிகவும் கடினம். பல மருந்துகள் மூளையை சென்றடையாது என்பதால் நோயாளிகளுக்கு இறப்பு ஆபத்து அதிகம். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வது முக்கியம்.
அமீபா உண்மையிலேயே மூளையை சாப்பிடுமா..?
அறிவியல் ரீதியாக, இது மூளை செல்களை உண்பதால் ‘மூளையை உண்ணும் அமீபா’ என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், இது மூளையை முழுவதுமாக உண்பதில்லை, ஆனால் மூளை செல்களை மிகவும் சேதப்படுத்தி கடுமையான தொற்று ஏற்படுகிறது. அதனால்தான் இது ஒரு ஆபத்தான உயிரினமாகக் கருதப்படுகிறது.
ALSO READ: தினமும் இவற்றை சாப்பிட்டால் போதும்! உங்களுக்கு ஒருபோதும் மாரடைப்பு வராது..
தடுக்க என்ன செய்யலாம்..?
மூளையை உண்ணும் அமீபா தொற்றுநோயை தடுக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. அதன்படி, சுத்தமான மற்றும் குளோரினேட்டட் உள்ள நீச்சல் குளத்தில் உள்ள நீரில் மட்டுமே நீந்தவும். ஏரிகள், ஆறுகள் அல்லது அழுக்கு நீர் உள்ள இடங்களிலிருந்து விலகி இருங்கள். நீச்சல் குளங்கள் மற்றும் நீர் பூங்காக்களில் உள்ள தண்ணீர் எப்போதும் சுத்தமாகவும் குளோரினேட்டட் ஆகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தண்ணீரில் நீந்தும்போது மூக்கு கவசத்தை அணியுங்கள். மெட்ரோ வாட்டர், ஏரி மற்றும் குளம் ஆகியவற்றில் தண்ணீர் அருந்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால், காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை மட்டுமே பயன்படுத்துங்கள். குளித்த பிறகு அல்லது நீந்திய பிறகு தலைவலி, காய்ச்சல் அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.