அடிக்கடி கொட்டாவி வருகிறதா..? அதன் பின்னால் இருக்கும் உடல்நல ரகசியம் தெரியுமா?
Benefits of Yawning: கொட்டாவி மூளையை குளிர்வித்து சோர்வை குறைக்க உதவுகிறது. இது நுரையீரலுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்க வழிவகுக்கிறது. கரியமில வாயுவை வெளியேற்றி சுவாச அமைப்பை சீராக்குகிறது. உடலுக்கு ஓய்வு தேவைப்படுவதை காட்டும் இயற்கை அறிகுறியாகவும் கொட்டாவி பார்க்கப்படுகிறது. உடலின் சமநிலையை பாதுகாக்கும் இயற்கை செயல்களில் ஒன்றாகும்.

கொட்டாவி
பொதுவாக இருமல், தும்மல், விக்கல், கொட்டாவி போன்றவை உடலின் இயல்பான செயல்பாடுகளாகவே பார்க்கப்படுகின்றன. இதில் கொட்டாவி என்பது சோர்வு அல்லது தூக்கத்திற்கான அறிகுறி மட்டுமல்ல. அது உடலின் உள்ளுறுப்புகள் சரியாக இயங்குவதற்கான ஒரு இயற்கை எச்சரிக்கை செயலாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக மூளை மற்றும் நுரையீரல் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு செயலாக இது பார்க்கப்படுகிறது. பலர் கொட்டாவியை சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டாலும், அதன் பின்னால் உடல்நலத்துடன் தொடர்புடைய பல காரணங்கள் உள்ளன.
மூளையை குளிர்விக்கும் கொட்டாவி
தொடர்ச்சியான வேலை, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற காரணங்களால் மூளை அதிக சோர்வடையும். அப்போது உடல் தன்னிச்சையாக கொட்டாவியை உருவாக்குகிறது. கொட்டாவி விடும் நேரத்தில் அதிக அளவு காற்று உடலுக்குள் செல்வதால், மூளைக்கு சற்றே குளிர்ச்சியான உணர்வு கிடைக்கிறது. இதனால் சோர்வடைந்த மூளை மீண்டும் சுறுசுறுப்படைய உதவுகிறது. அதனால் தான் அதிக நேரம் வேலை செய்த பிறகு அல்லது இரவு நேரங்களில் அடிக்கடி கொட்டாவி வருகிறது.
நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மை
கொட்டாவி விடும்போது நம்முடைய நுரையீரல் ஆழமாக காற்றை உள்ளிழுக்கிறது. இதன் மூலம் நுரையீரலின் சிறிய காற்றறைகள் சுருங்காமல் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் நுரையீரலின் உள்ளக பகுதிகள் விரிவடைந்து புதிய ஆக்சிஜன் காற்று நன்றாக பரவ உதவுகிறது. இதனால் உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கிறது. அதே நேரத்தில் நுரையீரலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கரியமில வாயுவும் வெளியேறுகிறது. இதனால் சுவாச அமைப்பு சீராக இயங்க உதவி கிடைக்கிறது.
உடலின் சோர்வை வெளிப்படுத்தும் அறிகுறி
ஒரு விஷயத்தில் ஆர்வமின்மை, உடல் சோர்வு அல்லது தூக்க கலக்கம் போன்ற உணர்வுகள் இருக்கும் போது கொட்டாவி அதிகமாக தோன்றும். சில நேரங்களில் ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்தாலோ, அதன் ஒலியை கேட்டாலோ அருகில் இருப்பவர்களுக்கும் கொட்டாவி வரும். இது மனித உடலில் உள்ள நரம்பியல் தொடர்புகளால் ஏற்படும் இயல்பான செயலாக கருதப்படுகிறது. குறிப்பாக ஓய்வு தேவைப்படுவதை உடல் சுட்டிக்காட்டும் ஒரு சிக்னலாகவும் கொட்டாவி பார்க்கப்படுகிறது.
Also Read: வயதான காலத்தில் வரும் தொப்பையை விரட்ட புதிய வழி: அதிரடி ஆய்வு முடிவுகள்!
ஆக்சிஜன் சுழற்சியை சீராக்கும் இயற்கை செயல்
கொட்டாவி மூலம் உடலுக்குள் புதிய ஆக்சிஜன் அதிகமாக நுழைகிறது. இதனால் ரத்த ஓட்டமும் சீராகிறது. உடலில் சோர்வாக இருந்த பகுதிகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்க உதவுகிறது. நுரையீரல் காற்றோட்டம் சீராகும் போது உடலின் பல உறுப்புகளும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்குகின்றன. அதனால் கொட்டாவி என்பது சாதாரண பழக்கம் மட்டுமல்ல; உடலின் சமநிலையை பாதுகாக்கும் இயற்கை செயல்களில் ஒன்றாகும்.