Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

”பல தலைமுறைகளைக் கவர்ந்தவர்”.. ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி, முக ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வாழ்த்து

Rajinikanth birthday: மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

”பல தலைமுறைகளைக் கவர்ந்தவர்”.. ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி, முக ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வாழ்த்து
பிரதமர் மோடி ரஜினிகாந்துக்கு வாழ்த்து
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 12 Dec 2025 11:58 AM IST

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் கலைத்துறையில் 50 ஆண்டுகள் கடந்துள்ளார். இதனை சிறப்பிக்கும் வகையில், அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், இன்று அவர் 76வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதுவரை 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், 50 ஆண்டுகளை கடந்தும் இன்றும் யாரும் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார்.

மேலும் படிக்க: Jailer 2: ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார்.. ஜெயிலர் 2 பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்!

பிரதமர் மோடி வாழ்த்து:

இந்நிலையில், ரஜினிக்கு தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

நண்பருக்கு வாழ்த்து சொன்ன முதல்வர்:

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டாலின் ரஜினிகாந்துக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.

இபிஎஸ் இதயங்கனிந்த வாழ்த்து:

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், “தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!” என்று பதிவிட்டுள்ளார்.

வாழ்த்து சொன்ன நயினார் நாகேந்திரன்:

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது ட்விட்டர் பதிவில், “தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன்; மூன்று தலைமுறைகளை ஆக்கிரமித்தவர்; திரையுலக வானில் நட்சத்திரமாக மிளிர்பவர்; 50 ஆண்டுகளாக மக்களின் இதயங்களில் ஆதர்ச நாயகனாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மேலும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று திரையுலகில் பல சாதனைகளைப் படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.