VK Sasikala: மீண்டும் சசிகலா சபதம்.. இபிஎஸ் ஓகே சொல்வாரா? – பரபரப்பில் அதிமுக!
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளன. இப்படியான நிலையில் அதிமுக மீண்டும் 2026ல் ஜெயலலிதா ஆட்சியை அமைக்கும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக பலவீனமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி - சசிகலா
சென்னை, ஆகஸ்ட் 19: மீண்டும் அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம் என வி.கே.சசிகலா சபதம் எடுத்துள்ள சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. இப்படியான நிலையில் 2021ம் ஆண்டு இருந்த அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு வேறு மாதிரி பரிணமித்துள்ளது. அதாவது அன்றைக்கு எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் என இரட்டை தலைமையில் தேர்தலை சந்தித்தது. ஆனால் அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஓரம் கட்டப்பட்டது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டது, எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆனது என இந்த 5 வருடத்தில் பல காட்சிகள் அதிமுகவில் நடந்தேறிவிட்டது.
இப்படியான நிலையில் அதிமுகவானது எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி வருகிறது. ஆனால் ஓபிஎஸ், சசிகலா என ஆகியோர் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் சசிகலா நேற்று (ஆகஸ்ட் 18) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக அரசின் மீது சரமாரியாக குற்றம் சாட்டினார்.
சசிகலா பேசியது என்ன?
சசிகலா பேசும் போது திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் ஒரு பேச்சு என்ற நிலையில் செயல்படுகிறது. இதனை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். சமீபத்தில் நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் விவகாரம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முறிய வழிமுறைகளை காண ஜெயலலிதா திட்டமிட்டு இருந்தார். அதைப்பற்றி எனக்கு முழுமையாக தெரியும் ஆனால் அவர் மறைந்து விட்டதால் பல மாற்றங்கள் ஏற்பட்டது.
Also Read: இபிஎஸ் குறிவைத்தால் தப்பாது.. கூட்டணிக்கு வராத கட்சிகள் குறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார்!
நான் கடந்த 39 ஆண்டுகள் அரசு நிர்வாகத்தை பற்றி அறிந்தவளாக இருக்கிறேன். இன்று மக்களை பார்க்க எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. இந்த நாள் இந்த ஆட்சியை கீழே இறக்குவதற்கான அத்தனை வேலைகளையும் செய்வேன் நிச்சயம் திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர விட மாட்டோம்.. திமுக அரசியலக்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழி போடுகிறது ஸ்டாலின் தொடர்ந்து முதல்வராக செயல்படாமல் கட்சித் தலைவராகவே செயல்பட்டு வருகிறார் என சசிகலா குற்றம் சாட்டினார்.
அதிமுக பற்றி கருத்து
அதே சமயம் அதிமுக பற்றியும் பேசிய சசிகலா, தற்போது வரை கட்சி பலவீனமாக உள்ளது அதனை மாற்றுவது தான் என்னுடைய வேலையாகும். அதை செய்யாவிட்டால் மக்களுக்கு அதிக சிரமம் ஏற்பட்டு விடும். அதிமுகவில் நிலவும் சிக்கலை புதிதாக வந்த யாராலும் தீர்க்க முடியாது. அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே தீர்க்க முடியும். அதனால் 2026 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி மலர்ந்தே தீரும் என்றும் அந்த திறமை எங்களிடம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
Also Read: அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்.. கூட்டணி குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி!
இப்படியாக அதிமுகவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தனது விருப்பத்தை சசிகலா வெளிப்படுத்தி உள்ளார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு என்ன பதிலளிக்க போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக பிரிவினால் தான் வெற்றி வாய்ப்பு கிட்டாமல் போனது. இப்படியான நிலையில் அதிமுக மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது அந்தக் கட்சி தொண்டர்களின் விருப்பங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.
திமுக அரசை மீண்டும் வரவிடக்கூடாது என முனைப்பு காட்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பு கட்சிக்குள் மீண்டும் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்ப்பதற்கு மறுத்து வருகிறது. ஆனால் காலம் மாற காட்சியும் மாறும் என்பதற்குள் தேர்தல் வருவதற்குள் அதிமுகவில் மாற்றம் ஏற்படலாம் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.