திரிபுவாதங்களுக்கு இடம் தரக்கூடாது.. விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்..
Tirumavalavan Statement: 2017 முதல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கருத்தியல் அடிப்படையில் போராடி வருவதோடு, 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் மக்களின் ஆதரவுடன் வெற்றிகளைப் பெற்றுள்ளதாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் சுட்டிக்காட்டி உள்ளார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 8, 2026: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அக்கட்சியின் தொண்டர்களுக்கு முக்கியமான சில விஷயங்களை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, திரிபுவாதங்களுக்கும் அவதூறுகளுக்கும் இடம் தரும் வகையில் இயக்கத் தோழர்களின் கருத்துகள் அமையக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சியினர் பிரச்சாரங்களிலும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் பெரிய மனது முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது – செல்வப்பெருந்தகை..
தேர்தல் நிலைப்பாடு என்ன?
இந்தச் சூழலில் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஊடகங்கள் ஆதாரமற்ற ஊகங்களை பரபரப்பான செய்திகளாக மாற்றுகின்றன. இந்நிலையில், தேர்தல் தொடர்பான நமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: விருப்ப மனுக்கள் பெறுவதில் தவெகவினர் ஆர்வம்.. 20,000 பேர் பதிவிறக்கம்.. முடங்கிய இணையதளம்..
கடந்த 25 ஆண்டுகளாக, வெற்றி–தோல்விகளை மட்டும் கணக்கில் கொண்டு அல்லாமல், கருத்தியல் அடிப்படையில் இணக்கமான கட்சிகளுடன் மட்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் உறவுகளை அமைத்து வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் முரண்பாடுகள் இருந்தாலும், தற்போது தேசம் தழுவிய அளவில் நிலவும் சனாதன அரசியலை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் காரணமாக, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து செயல்பட்டு வருகிறோம் என விளக்கமளித்துள்ளார்.
2001, 2011 சட்டமன்றத் தேர்தல்களில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற அனுபவம், 2016-இல் மக்கள்நலக் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது உள்ளிட்ட அரசியல் பின்னணியையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். 2017 முதல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கருத்தியல் அடிப்படையில் போராடி வருவதோடு, 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் மக்களின் ஆதரவுடன் வெற்றிகளைப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணி:
திமுக தலைமையிலான கூட்டணி மதச்சார்பின்மை, சமத்துவம், மாநில உரிமைகள் என்ற கொள்கை அடிப்படையில் இயங்குகிறது என்றும், அந்தக் கூட்டணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறம்பட வழிநடத்தி வருகிறார் என்றும் திருமாவளவன் பாராட்டியுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் உள்ள முரண்பாடுகள் கொள்கை அடிப்படையிலானவை மட்டுமே; தனிநபர் அல்லது எந்தச் சமூகத்தினருக்கும் எதிரானவை அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
திரிபுவாதங்களுக்கு இடம் தரக்கூடாது:
இறுதியாக, திரிபுவாதங்களுக்கும் அவதூறுகளுக்கும் இடம் தரும் கருத்துகளை தவிர்த்து, மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளின் வெற்றிக்காக தொண்டர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.