பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று தமிழகம் வருகை…தொகுதி பங்கீடு-கூட்டணி இறுதி செய்ய வாய்ப்பு!
BJP Election Incharge Piyush Goyal: தமிழக பாஜக தேரதல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் இன்று சென்னை வர உள்ளார். இவரின் வருகையை தொடர்ந்து, தேசிய ஜனநாய கூட்டணி இறுதி செய்யப்படுவதுடன், தொகுதிகள் பங்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

பாஜக தேர்தல் பொறுப்பாளர் தமிழகம் வருகை
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியை வீழ்த்தி, ஆட்சியைப் பிடிப்பதற்காக அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தற்போது வரை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதே போல, கூட்டணியும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவதற்காக வியூகங்களை வகுப்பதற்காக கடந்த டிசம்பர் 15- ஆம் தேதி தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை பாஜக தலைமை நியமித்தது.
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு
அதன்படி, அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்திருந்தார். அப்போது, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இந்த நிலையில், வருகிற ஜனவரி 23- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் படிக்க: கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம்… ராகுல் காந்தியுடனான சந்திப்பு குறித்து செல்வப்பெருந்தகை பேட்டி
பாஜக தேர்தல் பொறுப்பாளர் இன்று தமிழகம் வருகை
இதற்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி செய்யப்பட வேண்டும் எனவும், தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் பாஜக தரப்பில் இருந்து பேசப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் 2 நாள் பயணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இவர் சென்னையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி-தொகுதி பங்கீடு செய்ய வாய்ப்பு
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பிரதமர் மோடியின் தமிழகம் வருகைக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி செய்யப்படுவதுடன், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: “ஆண்களுக்கு இலவசப் பேருந்து யாராவது கேட்டார்களா?”.. அதிமுக வாக்குறுதிகளை சரமாரியாக விமர்சித்த சீமான்!!