சென்னையில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம்.. அனுமதி கோரி ஆணையரிடம் மனு..

TVK Leader Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் நாட்களில் சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் அதற்கு அனுமதி கோரி சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான பதில் விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சென்னையில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம்.. அனுமதி கோரி ஆணையரிடம் மனு..

கோப்பு புகைப்படம்

Published: 

15 Sep 2025 20:13 PM

 IST

சென்னை, செப்டம்பர் 15, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நடக்கக்கூடிய நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. அதாவது திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இதில் திமுக மற்றும் அதிமுக தரப்பில் ஏற்கனவே பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் செப்டம்பர் 13, 2025 அன்று முதல் பிரச்சாரம் மேற்கொண்டார். செப்டம்பர் 13, 2025 அன்று தொடங்கிய தேர்தல் பிரச்சார பயணம், டிசம்பர் 20, 2025 வரை சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் தனது முதல் நாள் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கினார்.

த.வெ.க தலைவர் விஜயின் பிரச்சாரம்:

திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட், தலைமை அஞ்சலக அலுவலகம், பாலக்கரை மற்றும் மரக்கடை ஆகிய பகுதிகளில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். காலை 11:30 மணிக்கு பிரச்சாரம் தொடங்க இருந்த நிலையில், அது 5 மணி நேரம் தாமதமாகி, மாலை 4 மணிக்கு மரக்கடை சென்றடைந்தார். திருச்சி விமான நிலையத்திலிருந்து விஜயின் பிரச்சார வாகனத்தை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்த காரணத்தால், அவரது வாகனம் மிகவும் மெதுவாக நகர்ந்தது. வெறும் 6 கிலோமீட்டர் தூரத்தை கடக்க சுமார் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டது.

மேலும் படிக்க: விஜய் பரப்புரையில் விதிமீறல்.. தவெக நிர்வாகிகள் மீது திருச்சி காவல்துறை வழக்குப்பதிவு!

அதனைத் தொடர்ந்து, நான்கு மணி நேரம் கழித்து அரியலூர் மாவட்டத்திற்கு சென்றார். அங்கு பரப்புரையில் ஈடுபட்ட விஜய், ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும், அரியலூரைத் தொடர்ந்து பெரம்பலூருக்கு விஜய் பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் அதிகளவு கூட்டம் காரணமாக அவரது பிரச்சார வாகனம் பெரம்பலூருக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. நள்ளிரவை தாண்டியும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால், நலனை கருதி பெரம்பலூர் பயணம் ரத்து செய்யப்பட்டது.

சென்னையில் எப்போது பிரச்சாரம்?

பின்னர் வேறு ஒரு நாளில் பெரம்பலூர் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என விஜய் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னையில் 2025 செப்டம்பர் 27 அன்று திருவள்ளூரிலும், அக்டோபர் 25, 2025 அன்று தென் சென்னை மற்றும் செங்கல்பட்டிலும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் தேதிகளை குறிப்பிட்டு, பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கவும், உரிய பாதுகாப்பு அளிக்கவும் கோரப்பட்டுள்ளது.

அனுமதி கோரி மனு:

சென்னை மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர், காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு காவல் ஆணையர் அலுவலகம் விரைவில் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சியில் நடந்த பிரச்சாரத்தின் போது தொண்டர்கள் பெரும் ஆரவாரத்தில் ஈடுபட்டிருந்த காரணத்தால், சென்னையில் அனுமதி வழங்கப்படுமா என்பது கேள்வியாக உள்ளது.