NDA கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு.. யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?.. ஆலோசிக்க சென்னை வருகிறார் பியூஸ்கோயல்..
Tamil Nadu Assembly Election: அதிமுக கூட்டணி கட்சியில் உள்ள சிறிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்திற்கு பதில் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

கோப்புப் புகைப்படம்
Tamil Nadu Polls 2026: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி, வேட்புமனுத் தாக்கல் வருகிற 30ம் தேதி தொடங்க இருக்கிறது. இவ்வாறு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு குறைந்த நாட்களே இருக்கும் நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளாக இருக்கக்கூடிய திமுக, அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முற்றுப் பெறவில்லை. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5, மதிமுகவுக்கு 4, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
இதையும் படிக்க: கடந்த தேர்தலை விட குறைவான தொகுதிகளில் திமுக போட்டி?.. கூட்டணி கட்சிகளுக்காக தியாகம்.. பின்னால் பலே வியூகம்!!
திமுக கூட்டணியில் இழுபறி நிலை:
இதுவரையில் கூட்டணி கட்சிக்கு 43 இடங்களை திமுக வழங்கியுள்ளது. தேமுதிகவுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவே தேமுதிகவை போன்று தங்களுக்கும் கூடுதல் இடங்கள் வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனிடையே, திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நேற்று திடீரென கூட்டணியில் இருந்து விலகியது. இதனால், தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் திமுக கூட்டணியில் இழுபறி நிலை நீடிக்கிறது.
பேச்சுவார்த்தையை தொடங்காத அதிமுக:
அதேசயம், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. உத்தேசமாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை அதிமுக தரப்பு கூறியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தையை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களான அன்புமணி (பாமக), டிடிவி தினகரன் (அமமுக) ஆகியோரும் டெல்லி சென்று பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து பேசியுள்ளனர்.
தாமரை சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தல்:
அப்போது அதிமுக கூட்டணி கட்சியில் உள்ள சிறிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்திற்கு பதில் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிமுக – பாஜக கூட்டணி கட்சிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படாமல் உள்ளது.
உத்தேச தொகுதி பங்கீட்டு விவரம்:
தற்போதைய நிலவரப்படி அதிமுக 170 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 17, அமமுகவுக்கு 9, தமாகாவுக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடம் இரட்டை இலை அல்லது தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளன.
இதையும் படிக்க: “டாப் கியரில் நாதக”.. முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணம்.. நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் சீமான்..
பியூஸ்கோயல் சென்னை வருகை:
அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ்கோயல் கடந்த சில நாட்களுக்கு முன்பே சென்னை வருவதாக இருந்தது. ஆனால், டெல்லி சந்திப்புகள் நிகழ்ந்ததால் அவர் சென்னை வரவில்லை. இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை சென்னை வரும் பியூஸ்கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அதற்கான ஒப்பந்தங்களும் இன்றைய தினமே கையெழுத்தாகலாம் எனத் தெரிகிறது.