“நடிகனைப் பார்த்தால் விசில் அடிக்கலாம்.. நாட்டை கொடுக்க முடியுமா?”.. திமுக கூட்டணி ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் பரப்புரை!!
Tamilnadu Assembly Election: பாஜக சொல்வது டபுள் இன்ஜின் சர்க்கார் அல்ல, அது ஒரு டப்பா சர்க்கார். பதவி ஆசைக்காக அதிமுகவினர் பாஜக என்கிற பாம்பைத் தமிழ்நாட்டிற்குள் அழைத்து வருகிறார்கள். அந்தப் பாம்பு, அதைத் தூக்கி வந்தவர்களையும் சேர்த்தே விழுங்கிவிடும்" என்று எச்சரித்தார்.

பிரகாஷ் ராஜ்
Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில், உச்சகட்ட அரசியல் பரபரப்பில் தேர்தல் களம் உள்ளது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசிய அரசியல் கருத்துகள் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிக்க: பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்?.. ரகசியம் உடைத்த இபிஎஸ்..
நான் நடிகனாக வரவில்லை:
தனது உரையைத் தொடங்கிய பிரகாஷ் ராஜ், “நான் உங்கள் முன் ஒரு நடிகனாக நிற்கவில்லை. நடிப்பது எனது தொழில்; அதைப் பார்த்து என்னை வாழ வைத்தவர்கள் நீங்கள். நாட்டுக்கு ஒரு பிரச்சனை வரும்போது ஓடி வருவது ஒரு கலைஞனின் கடமை. அந்த அடிப்படையில் ஒரு வாக்காளனாக உங்களிடம் பேச வந்துள்ளேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்தத் தேர்தலை மூன்று விதமான அரசியல் அணுகுமுறைகளுக்கு இடையிலான போட்டியாக அவர் வகைப்படுத்தினார். திராவிட மாடல்: கல்வி மற்றும் மொழியைப் பாதுகாக்கும் மாடல். அடிமை மாடல்: தன்மானத்தை அடகு வைக்கும் மாடல். சினிமா மாடல்: ஒரே நாளில் முதல்வர் ஆகத் துடிக்கும் மாடல் என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய – மாநில அரசுகள் மீதான விமர்சனம்
பாஜக மற்றும் அதிமுக அரசுகளைக் கடுமையாகச் சாடிய அவர், “பாஜக சொல்வது டபுள் இன்ஜின் சர்க்கார் அல்ல, அது ஒரு டப்பா சர்க்கார். பதவி ஆசைக்காக அதிமுகவினர் பாஜக என்கிற பாம்பைத் தமிழ்நாட்டிற்குள் அழைத்து வருகிறார்கள். அந்தப் பாம்பு, அதைத் தூக்கி வந்தவர்களையும் சேர்த்தே விழுங்கிவிடும்” என்று எச்சரித்தார்.
நாட்டை கையில் கொடுக்க முடியுமா?
சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வருபவர்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “சினிமாவில் ஒரே படத்தில் முதல்வராக நடிக்கலாம், ஆனால் நிஜ அரசியலில் அது சாத்தியமில்லை. தமிழ்நாட்டின் மொழி, இனம் எனப் பிரச்சனை வந்தபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? மக்கள் காட்டும் அன்பைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள். ஒரு நடிகனைப் பிடித்தால் கைதட்டி விசில் அடிக்கலாம்; ஆனால் நாட்டை அவர் கையில் கொடுக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க: மு.க.ஸ்டாலின் ஐயா ஒரு கீ கொடுக்கும் பொம்மை.. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேச்சு!
தொகுதி மறுவரையறை குறித்த கவலை:
தற்போது நாடாளுமன்றத்தில் விவாதத்தில் உள்ள தொகுதி மறுவரையறை குறித்துப் பேசிய அவர், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மாற்றினால் தென்னிந்தியா அரசியல் அநாதையாக மாறும் என்று குறிப்பிட்டார். “மயிலைத் தேசியப் பறவையாகத் தேர்வு செய்தது அதன் அழகிற்காகவே தவிர, எண்ணிக்கையை வைத்து அல்ல. பெரும்பான்மையை வைத்துத்தான் எல்லாம் என்றால் காகத்தைத்தான் தேசியப் பறவை ஆக்கியிருக்க வேண்டும் என்று அண்ணா அன்றே சொன்னார்” எனச் சுட்டிக்காட்டினார்.