“அரசியல் சூதாடிகளைத் தூக்கி வீசுங்கள்”.. ‘விசில்’ புரட்சிக்கு அழைப்பு விடுத்த விஜய்!
Tamilnadu Assembly Election: தன்னை அதிகாரத்தை ஏவி மிரட்டவோ, ஆதாயங்களைக் காட்டி அடக்கவோ முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், பாசிச மனநிலை கொண்ட கட்சிகளின் நெருக்கடிகளுக்குத் தலைவணங்கப் போவதில்லை. சமூகநீதிக் காவலரணாகவும், ஜனநாயகப் பேரரணாகவும் தமிழக வெற்றிக் கழகம் விளங்கும். ஊழல் விஷ சக்திகளாலோ, பாசிச சக்திகளாலோ தவெகவை வீழ்த்த முடியாது.

தவெக தலைவர் விஜய்
Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழக மக்களுக்கு உணர்ச்சிகரமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம் என்று குறிப்பிட்டுள்ளார். தனது அரசியல் எதிரிகளை கடுமையாகச் சாடியுள்ளதுடன், ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது அறிக்கையில் எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் தாங்கி வருவதாக கூறியுள்ளார்.
இதையும் படிக்க: இறுதிக்கட்ட பரப்புரையில் அரசியல் தலைவர்கள்.. இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்வு..
ஒருபோதும் அடிபணிய மாட்டான்:
என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம்.
எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே…
— TVK Vijay (@TVKVijayHQ) April 21, 2026
திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளைப் பெயரிட்டுக் குறிப்பிட்டுள்ள விஜய், “நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும், கொள்கை எதிரியான பிளவுவாத சக்தி பாஜகவும் நமக்குச் சொல்லொணா நெருக்கடிகளையும் வேதனைகளையும் விளைவித்து வருகின்றனர். இவர்களின் அழுத்தங்களுக்கு இந்த விஜய் ஒருபோதும் அடிபணிய மாட்டான்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
நெருக்கடிகளுக்கு அஞ்சமாட்டேன்:
தன்னை அதிகாரத்தை ஏவி மிரட்டவோ, ஆதாயங்களைக் காட்டி அடக்கவோ முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், பாசிச மனநிலை கொண்ட கட்சிகளின் நெருக்கடிகளுக்குத் தலைவணங்கப் போவதில்லை. சமூகநீதிக் காவலரணாகவும், ஜனநாயகப் பேரரணாகவும் தமிழக வெற்றிக் கழகம் விளங்கும். ஊழல் விஷ சக்திகளாலோ, பாசிச சக்திகளாலோ தவெகவை வீழ்த்த முடியாது.
மக்களே எனது உந்துசக்தி:
எந்தவொரு அரசியல் பின்புலமும் இன்றி களத்திற்கு வந்த தனக்கு, தமிழக மக்கள் அளிக்கும் ‘நீ வாப்பா’… ‘நீ வா தம்பி’… ‘நீ வாண்ணா’… ‘நீ வா நண்பா’… ‘நீ வா தோழா’… ‘நாங்க பாத்துக்கறோம்’… என்ற அன்பே பெரும் உந்துசக்தி என்று விஜய் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தன்னையும் மக்களையும் எந்தத் தீய சக்தியாலும் பிரிக்க முடியாது என்றும், அப்படிப் பிரிக்க நினைப்பவர்களை மக்கள் வரும் தேர்தலில் தூக்கி வீசுவது உறுதி என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: “தமிழகத்தை வஞ்சிக்க நினைப்போருக்கு நான் என்றுமே ‘டேஞ்சர்’ தான்!”.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!
விசில் சின்னத்திற்கு வாக்குச் சேகரிப்பு:
பணத்தை மட்டுமே நம்பி அரசியல் நடத்தும் “அடிமை அரசியல் சூதாடிகளின்” சின்னங்களுக்கு வாக்களிப்பது, பிளவுவாத சக்திகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகவே முடியும் என்று எச்சரித்துள்ள விஜய், “எதிர்வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி அன்று, ஊழல் பணம் மழையாகப் பொழிந்தாலும், மக்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாகச் சென்று ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இதுவே எவ்வித மறுசிந்தனைக்கும் இடம் தராத ஒற்றைத் தேர்வாக இருக்க வேண்டும்” என்று இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். “வாகை சூடுவோம்.. வரலாறு படைப்போம்.. வெற்றி நிச்சயம்” என்ற முழக்கத்துடன் தனது அறிக்கையை அவர் நிறைவு செய்துள்ளார்.