ரூட்டை மாத்தும் விஜய்.. பிரச்சார பயணத்தில் மாற்றம்.. இனி இப்படி தான் இருக்கும்
TVK Leader Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது பிரச்சார பயணத்தில் மாற்றம் செய்துள்ளார். முதலில் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளும் பிரச்சாரங்களில் 3 மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள இருந்தார், ஆனால் தற்போது அதனை 2 மாவட்டங்களாக மாற்றி உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
செப்டமபர் 16, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பிரச்சார பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. இந்த வகையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 2025 செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் தனது பிரச்சார பயணத்தை தொடங்கினார். முதல் நாளான அன்று திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சார திட்டம் 2025 டிசம்பர் 20 வரை சனிக்கிழமைகளில் மட்டும் மேற்கொள்ளும்படி திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வரவிருக்கும் சனிக்கிழமை, அதாவது 2025 செப்டம்பர் 20 ஆம் தேதி நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம்:
செப்டம்பர் 13, 2025 அன்று தலைவர் விஜய் திருச்சி விமான நிலையம் சென்றதிலிருந்து தொண்டர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தை கடக்க 5 மணி நேரம் எடுத்துக்கொண்டது. அதனைத் தொடர்ந்து மாலை 4 மணி அளவில் திருச்சியில் பிரச்சாரம் முடிவடைந்து, பின்னர் இரவு 9 மணி அளவில் அரியலூரில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க: டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி.. அதிமுக மோதல் முடிவுக்கு வருமா?
அதன் பின் அவர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு செல்ல இருந்தார். ஆனால் பெரம்பலூர் செல்லும் போது பிரச்சார வாகனத்தை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்ததால், அது ஒரு மணி நேரமாக நகர முடியாமல் அதே இடத்தில் இருந்தது. மேலும் நள்ளிரவைத் தாண்டியதால் மக்களின் நலன் கருதி பெரம்பலூர் பயணம் ரத்து செய்யப்பட்டது.
பிரச்சார பயணத்தில் மாற்றம்:
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில், அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதன் காரணமாக அவரது பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சனிக்கிழமைகளில் மட்டும் மேற்கொள்ளும் பிரச்சாரத்தில், ஒரு நாளுக்கு மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால் மக்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு, ஒரு நாளுக்கு இரண்டு மாவட்டங்களில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகவா? – இபிஎஸ்க்கு டிடிவி தினகரன் பதிலடி!
அந்த வகையில், செப்டம்பர் 20, 2025 அன்று நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வேறு ஒரு நாளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாகையில் புத்தூர் அருகே மட்டுமே அவர் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அவர் சாலை வலம் மேற்கொள்ளக் கூடாது என்றும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் தொண்டர்கள் நடந்து கொள்ளக் கூடாது என்றும் பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.