லிஸ்டில் 5 சின்னம்.. விசில் தான் வேண்டும்.. தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க த.வெ.க திட்டம்..
TVK Symbol For Election: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 184 ஒதுக்கப்படாத சின்னங்களில் லேப்டாப், தொலைக்காட்சி, பேட், விசில் உள்ளிட்ட பல சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஏதேனும் ஐந்து சின்னங்களைத் தேர்வு செய்து தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோப்பு புகைப்படம்
சென்னை, அக்டோபர் 24, 2025: வரவிருக்கும் 2025 நவம்பர் மாதம் முதல் வாரத்தில், தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் சின்னம் கோரி விண்ணப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெற இருக்கக்கூடிய நிலையில், அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தரப்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல் தேர்தலை சந்திக்கும் தவெக: `
இந்த சூழலில், புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. தமிழக வெற்றிக்கழகம் 2024 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்டது. “2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு” என்ற குறிக்கோளுடன் பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பல மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டார். தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேலும் படிக்க: அதிமுக யாரையும் கூட்டணிக்கு வற்புறுத்தாது.. அடித்துச் சொல்லும் செல்லூர் ராஜூ
செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சுமார் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விஜயின் அரசியல் செயல்பாட்டில் பின்னடைவு:
கரூர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக்கழகமும் அதன் தலைவர் விஜயின் அரசியல் செயல்பாடுகளும் தற்காலிகமாக முடங்கியுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான காசோலைகளும் வழங்கப்பட்டன. ஆனால் இதுவரை தலைவர் விஜய் கரூர் மக்களை நேரில் சந்திக்கவில்லை. இருப்பினும், விரைவில் கரூர் சென்று மக்களை சந்திப்பதாக அவரது தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக்கழகத்தின் செயல்பாடுகள் பின்தங்கியிருந்தாலும், பிற அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய அனைத்தும் இந்த கரூர் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் படிக்க: லண்டன் பார்சல்.. தஞ்சை பெண்ணிடம் ரூ.47 லட்சம் மோசடி!
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கரூர் மக்களை சந்திப்பதற்காக மாவட்ட கண்காணிப்பாளர் இடம் அனுமதி கேட்டுள்ளதாகவும், விரைவில் அவர் மக்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பிற்குப் பிறகு, மீண்டும் மக்கள் சந்திப்பை அவர் தொடர்வார் என கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சின்னம் பெற தீவிரம் காட்டும் தவெக:
இது ஒரு பக்கம் இருக்க, தமிழக வெற்றிக்கழகம் தேர்தலை சந்திப்பதற்கான பணிகளையும் ஒருங்கிணைத்து வருகிறது. தேர்தலை சந்திப்பதற்கு மிகவும் முக்கியமானது கட்சியின் சின்னம். கட்சியின் சின்னம் மக்கள் மனதில் ஆழமாக பதிய வேண்டும்.
அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் ஐந்து சின்னங்களை கேட்டு விண்ணப்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில், கட்சி ஆட்டோ சின்னம் கேட்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அந்த சின்னம் ஏற்கனவே வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், அதை பெற முடியாது என கூறப்படுகிறது.
விசில் சின்னம் பெற திட்டமா?
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 184 ஒதுக்கப்படாத சின்னங்களில் லேப்டாப், தொலைக்காட்சி, பேட், விசில் உள்ளிட்ட பல சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஏதேனும் ஐந்து சின்னங்களைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, 182வது இடத்தில் உள்ள விசில் சின்னத்தை தமிழக வெற்றிக்கழகம் அதிக விருப்பத்துடன் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. தலைவர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தில் விசில் முக்கிய சின்னமாக இருந்தது; அந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. எனவே, விசில் சின்னத்தைப் பெற்றால் அது மக்கள் மனதில் எளிதாக பதியும் என கட்சி நிர்வாகிகள் நம்புகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.