சேலத்தில் மக்களை சந்திக்கும் விஜய்.. எப்போது? அனுமதி கேட்டு கடிதம்..

Vijay Public Meeting: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வரக்கூடிய பிப்ரவரி 13ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் மக்களைச் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு விஜய் மாவட்டம் தோறும் பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது கரூர் மாவட்டத்தில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக, விஜயின் மக்கள் சந்திப்பு பயணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

சேலத்தில் மக்களை சந்திக்கும் விஜய்.. எப்போது? அனுமதி கேட்டு கடிதம்..

கோப்பு புகைப்படம்

Published: 

04 Feb 2026 07:58 AM

 IST

சென்னை, பிப்ரவரி 4, 2026: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலைச் சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. இதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் மாவட்டச் செயலாளர் கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம், ஆலோசனைக் கூட்டம், பொதுக்குழுக் கூட்டம் என பல்வேறு கட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், சமீபத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் அவர்களுக்கு பொதுச் சின்னமாக விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்தச் சூழலில், வரக்கூடிய நாட்களில் தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் பிரச்சாரம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்பு:

அதில் முக்கியமாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வரக்கூடிய பிப்ரவரி 13ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் மக்களைச் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு விஜய் மாவட்டம் தோறும் பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது கரூர் மாவட்டத்தில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக, விஜயின் மக்கள் சந்திப்பு பயணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

மேலும் படிக்க: அரசியல் கட்சி தலைவருக்கான பிரசார வாகனங்கள் தயார் செய்யும் பணி…என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா!

அதனைத் தொடர்ந்து, அவர் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாவட்டத்தில் மக்களைச் சந்தித்தார். இதற்காக காவல்துறை தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த பொதுமக்கள் சந்திப்பு நடைபெற்றது.

அனுமதி கேட்டு கடிதம்:

இந்தச் சூழலில், அடுத்த கட்டமாக சேலம் மாவட்டத்தில் மொடக்குறிச்சி பகுதியில் மக்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் ஒரு பக்கம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அனுமதி கேட்டு மாவட்டக் கண்காணிப்பாளரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடம் மக்களைச் சந்திக்க ஏதுவான இடமா, பாதுகாப்பான இடமா என்பதைக் குறித்து ஆய்வு செய்து, அதனைத் தொடர்ந்து அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக தரப்பை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், அடுத்த கட்டமாக எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகக் கருதப்படும் சேலம் மாவட்டத்தில் அவர் பொதுமக்களைச் சந்திக்க உள்ளதால், இது அரசியல் ரீதியாக கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க: விமான பயணிகளுக்கு குட் நியூஸ்…சென்னை டூ திருச்சி-மதுரைக்கு சிறிய ரக விமான சேவை தொடக்கம்!

கூட்டத்தின் முக்கியத்துவம் என்ன?

மேலும், சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள இந்த மக்கள் சந்திப்பை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் முக்கிய தேர்தல் பிரச்சார நிகழ்வாக கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன. இந்த கூட்டத்தின் மூலம் கட்சியின் முதற்கட்ட தேர்தல் இலக்குகள், ஆட்சியியல் நோக்கம் மற்றும் மக்களுக்கான வாக்குறுதிகள் குறித்து விஜய் விரிவாக உரையாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் ஊழல் ஒழிப்பு போன்ற விவகாரங்கள் இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

முதல் எல்என்ஜி - டீசல் ரயிலை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே
பீகாரில் இனி அரிசி, கோதுமை ஏடிஎமிலேயே கிடைக்கும் - அறிமுகமாகவிருக்கும் தானிய ஏடிஎம்
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்?.. செளந்தர்யா சொன்ன நச் தகவல்!!
திரைத்துறை நண்பனுக்கு பிறந்தநாள்.. அரிய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து சொன்ன மோகன்லால்..