Tiruchirappalli East Election Result: திருச்சி கிழக்கில் நிலவரம் என்ன? யாருக்கு சாதகம்?
Tiruchirappalli East Assembly Election Result 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெற்று வரும் நிலையில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ், அதிமுக சார்பில் ஜி.ராஜசேகரன், தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய், நாம் தமிழர் சார்பில் மருத்துவர் வி. கிருஷ்ணசாமி ஆகியோர் களம் காண்கின்றனர்.

திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள்
கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்ற 234 தொகுதிகளுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. திமுக சார்பில் இங்கு இனிகோ இருதயராஜும், அதிமுக சார்பில் ஜி.ராஜசேகரன் மற்றும் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவர் வி. கிருஷ்ணசாமி ஆகியோர் போட்டியிட்டிருக்கின்றனர். இந்த தொகுதியில் கிறிஸ்தவ வாக்காளர்கள் அதிகம் இருப்பதால் இந்த தொகுதியை விஜய் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதே போல திமுக சார்பில் போட்டியிடும் இனிகோ இருதயராஜ் கிறிஸ்தவர் என்பதால் இருவருக்கும் போட்டிகள் கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.
திருச்சியின் முக்கிய தொகுதி
இந்த தொகுதி திருச்சியின் மொத்தம் 25 வார்டுகளை கொண்டதாக இருக்கிறது. மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், நத்தர்ஷா பள்ளிவாசல், செயின்ட் ஜோசப் சர்ச் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்கள் இந்த தொகுதியின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் சத்திரம் பேருந்து நிலையம், காந்தி சந்தை, பெரியகடைவீதி என இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ளதால் இது திருச்சியின் முக்கிய தொகுதியாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் இனிகோ இருதயராஜ், அதிமுகவின் வெள்ளமண்டி நடராஜனை விட 53,797 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்த நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் மக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் தவெக தலைவர் விஜய்க்கும் இங்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு திருச்சி கிழக்கு என பெயர் மாற்றப்பட்டது. இந்த திருச்சி கிழக்கு தொகுதியில் 1,04,883 ஆண் வாக்காளர்கள், 1,12,460 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,17,397 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கும் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. அதற்கு ஏற்ப விஜய் தனது முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை திருச்சியில் தொடங்கினார்.
மக்களின் பிரச்னைகள் என்ன?
திருச்சி விமான நிலைய இணைப்பு வசதி குறைவாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் பழைய நகரப் பகுதிகளில் போதுமான பொதுக் கழிப்பறை வசதிகள் இல்லாததும் இங்கு பிரச்னையாக இருக்கிறது. கடந்த 16 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சர்வீஸ் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது. குப்பை மேலாண்மை சீராக இல்லாதது மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்றவை திருச்சி கிழக்கு மக்களின் முக்கிய பிரச்னைகளாக கூறப்படுகிறது.