தலைமை செயலர் – டிஜிபி வரிசையில் உள்துறை செயலர் மாற்றம்.. கோட்டையில் அதிரும் புதிய நியமனங்கள்!
Tamil Nadu Home Secretary: தமிழகத்தின் உள்துறை செயலர் தீரஜ் குமார் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், தலைமைச் செயலகத்தில் இன்று மாலைக்குள் பதவி ஏற்க உள்ளார். இதற்கான உத்தரவை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் பணி புரியும் பல்வேறு அரசு துறைகளின் தலைமை அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவின் பேரில், மாற்றம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக, புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சாய்குமார், தமிழக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் மற்றும் ஆயுதப்படை காவல்துறை தலைமை இயக்குனராக 1995- ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் மிட்டல், சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு பதவி ஏற்றுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தின் உள்துறை செயலராக இருந்த தீரஜ்குமாரை பணியிட மாற்றம் செய்து தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக உள்துறை செயலர் மாற்றம்- பதவியேற்பு
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழகத்தின் உள்துறை செயலாளராக இருந்து வரும் தீரஜ்குமார் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவருக்கு பதிலாக, தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக மணிவாசன் நியமனம் செய்யப்படுகிறார். உள்துறை செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட தீரஜ் குமாரை எந்தவிதமான தேர்தல் பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. களத்தில் 4,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்..
தேர்தலை நியாயமாக நடத்தவே பணியிடமாற்றம்
மேலும், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்காக துறைகளின் மூத்த அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் இன்று மாலைக்குள் பதவி ஏற்பார் என்று தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும் நேரத்தில் அரசு துறைகளில் உள்ள அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கமாகும்.
தலைமைச்செயலராக முருகானந்தத்தை நியமிக்க வேண்டும்
ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் தலைமைச் செயலாளர், தமிழகத்தின் பொறுப்பு டிஜிபி, தமிழகத்தின் உள்துறை செயலாளர் உள்ளிட்ட பெரிய பொறுப்புகள் வகிக்கும் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவது மிக மிக அரிதாக உள்ளதாக கருத்துக்கள் எழுந்து வருகின்றன. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் எந்தவித புகார் எழாத நிலையில் தலைமைச் செயலாளர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மீண்டும் அவரை தலைமைச் செயலாளராக பணியமர்த்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: “கரூரில் இருந்து செந்தில் பாலாஜி தொகுதி மாறியது ஏன்?” மக்களுக்கும் புரியும்.. தவெக சராமாரி கேள்வி..