தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்.. ஆலோசிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?
BJP Meet: பாஜக மையக்குழு கூட்டத்தில், தமிழக பாஜக தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன, எந்தெந்த தொகுதிகள் வலுவாக உள்ளன, எந்தெந்த தொகுதிகள் பலவீனமாக உள்ளன, பலவீனமான தொகுதிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதுடன், அதிமுகவுடன் நடைபெறவுள்ள தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் கேட்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, டிசம்பர் 23, 2025: தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், டிசம்பர் 23, 2025 தேதியான இன்று தமிழகத்திற்கு வருகை தருகிறார். இன்று பாஜகவின் மையக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற இருப்பதை ஒட்டி அவர் வருகை தருகிறார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், அரசியல் களமும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக பாஜகவைப் பொறுத்தவரையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவாக காலூன்ற வேண்டும் என்ற நோக்கில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
தேர்தலை சந்திக்க தயாராகும் பாஜக:
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையும் பாஜக மீண்டும் அதிமுகவுடன் இணைந்து சந்திக்க உள்ளது. இந்த முறை எப்படியாவது அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜக தரப்பில் அதற்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் பாஜக சுமார் 50 தொகுதிகள் கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக, 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு சுமார் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயல் தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டம்:
இந்தச் சூழலில், தமிழகத்தில் தேர்தலை சந்திப்பதற்காக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தமிழகத்திற்கு வருகை தருகிறார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அவர் சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும் படிக்க: சென்னையில் இன்று நடக்கும் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்.. அமைப்புப் பணிகள் குறித்து விவாதிக்க திட்டம்..
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக பாஜக தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன, எந்தெந்த தொகுதிகள் வலுவாக உள்ளன, எந்தெந்த தொகுதிகள் பலவீனமாக உள்ளன, பலவீனமான தொகுதிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதுடன், அதிமுகவுடன் நடைபெறவுள்ள தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் கேட்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கடந்த முறை அதிக வாக்குகள் பெற்ற தொகுதிகளை குறி வைத்து, இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தர இருக்கக்கூடிய சூழலில், பாஜக தரப்பில் அதற்கான பல்வேறு ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.