ஏப்ரல் 4, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல், வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், சசிகலா தரப்பில் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, 234 தொகுதிகளிலும் சசிகலாவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
மேலும் படிக்க: “காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்”.. பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை..
புதிய கட்சியை தொடங்கிய சசிகலா:
சசிகலா, பிப்ரவரி 24ஆம் தேதி (முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று) கமுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனிக் கட்சியை தொடங்கியதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இதன் பின்னர், பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடைசியாக, இருவரும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்தனர். இதுதொடர்பாக ஒப்பந்தத்திலும் இருவரும் கையெழுத்திட்டனர்.
மேலும் படிக்க: நெருங்கும் தேர்தல்.. சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக மையக்குழு கூட்டம்..
இந்த நிலையில், சசிகலா தொடங்கியுள்ள “அனைத்து இந்தியா புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்” தரப்பில் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நான்காம் கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது.
4ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு:
அதில்: பேராவூரணியில் ரா. ரவி, ஒட்டப்பிடாரத்தில் அமுதா, அருப்புக்கோட்டையில் தர்மராஜ், பரமத்தி வேலூரில் விஜய், சூரிய பாலாஜி, பல்லாவரத்தில் ராஜ்குமார், பொள்ளாச்சியில் மெய்குரு, திருவிகா நகரில் கிறிஸ்டி, கோவை வடக்கில் ராகுல் காந்தி, திருச்செந்தூரில் கோபாலகிருஷ்ணன், விளாத்திகுளத்தில் பொன். பாண்டி, உளுந்தூர்பேட்டையில் உதயகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கனவே விளாத்திகுளம் மற்றும் உளுந்தூர்பேட்டை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.