ராமதாஸ் vs அன்புமணி.. மாம்பழ சின்னம் யாருக்கு? சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணை..
அன்புமணி தரப்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. அதிமுக தலைமையிலான அந்த கூட்டணியில் கிட்டத்தட்ட 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ராமதாஸ் தரப்பு சசிகலா உடன் கூட்டணி அமைத்து, வடமாவட்டங்களை குறிவைத்து சுமார் 40 தொகுதிகளில் போட்டியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, மார்ச் 25, 2026: பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி, சின்னம், பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தரப்பில் தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணை நடைபெற உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி கடந்த சில மாதங்களாக இரண்டாகப் பிரிந்து தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. தந்தை–மகன் இடையேயான அதிகாரப் போட்டி தீவிரமடைந்த நிலையில், இருவரும் தனித்தனியாக கட்சியின் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாமக இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு அணிகளாக செயல்படும் பாமக:
குறிப்பாக, அன்புமணி தரப்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. அதிமுக தலைமையிலான அந்த கூட்டணியில் கிட்டத்தட்ட 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ராமதாஸ் தரப்பு சசிகலா உடன் கூட்டணி அமைத்து, வடமாவட்டங்களை குறிவைத்து சுமார் 40 தொகுதிகளில் போட்டியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு… கடைசியில் ஒரு ட்விஸ்ட்!
இவ்வாறு இருவரும் தனித்தனியாக தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வரும் நிலையில், ராமதாஸ் தரப்பு தொடக்கத்திலிருந்தே “அன்புமணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை; அவர் கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்தக் கூடாது” என வலியுறுத்தி வந்தது.
அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு:
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்காததால், பாமக பொதுச் செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றார்.
இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது, தேர்தல் ஆணையம் தரப்பில் மாம்பழச் சின்னமும் கட்சியின் பெயரும் அன்புமணி தரப்பிற்கே என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சமீபத்திய விசாரணையில் ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர், “ஒரு கட்சி இரண்டாகப் பிரிந்தால் அதன் சின்னத்தை முடக்குவது தான் வழக்கம்” என வாதிட்டார். இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, “நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகிவிடக் கூடாது” எனக் குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?
இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவில் தவறு இல்லை எனவும், அதே நேரத்தில் மாம்பழச் சின்ன உரிமை தொடர்பான வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டால் மூன்று நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று விசாரணை:
அதன்படி, ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தர்ம பிரபு, இந்த மனுவின் நகலை அன்புமணி தரப்புக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு இன்று (மார்ச் 25) விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த வழக்கின் இறுதி விசாரணையில் மாம்பழச் சின்னம் யாருக்கு, கட்சியின் கொடி மற்றும் பெயர் யாருக்கு என்பதில் தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி, தீர்ப்பு அன்புமணி தரப்புக்கு சாதகமாக வந்தால், ராமதாஸ் தரப்பு புதிய சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை உருவாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.