ஜெயலலிதா படத்தை நெஞ்சில் சுமந்து வந்து பதவியேற்ற தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்!
K. A. Sengottaiyan : தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது, அவர் தனது சட்டை பையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைத்திருந்தது பேசும் பொருளாகி உள்ளது.

ஜெயலலிதா படத்துடன் பதவியேற்ற கே.ஏ.செங்கோட்டையன்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் தமிழகத்தில் புதிய ஆட்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை ( மே 10- ஆம் தேதி) பொறுப்பேற்றது. இதைத் தொடர்ந்து, 233 சட்டமன்ற தொகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று திங்கள்கிழமை ( மே 11- ஆம் தேதி) தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில், தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள கருப்பையா முன்னிலையில் புதிதாக தேர்வான எம்எல்ஏக்கள் பதவி ஏற்றனர். இதில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளரும், தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என். ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளரும், வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர்.
ஜெயலலிதா படத்துடன் பதவியேற்ற கே.ஏ.செங்கோட்டையன்
இதில், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன் எம். எல். ஏ.வாக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது, அவர் தனது சட்டை பையில் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா புகைப்படத்தை வைத்திருந்தார். ஜெயலலிதா புகைப்படத்துடன் கே. ஏ. செங்கோட்டையன் எம். எல். ஏ. பதவியேற்றது பேசும் பொருளாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியம்
அதிமுகவில் முன்னாள் அமைச்சராகவும், கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏவுமாக இருந்து வந்த கே. ஏ. செங்கோட்டையன், தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக அந்தக் கட்சியில் இருந்து திடீரென விலகினார். இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு, தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.
11- ஆவது முறையாக செங்கோட்டையன் பதவியேற்பு
அத்துடன் ஈரோடு மாவட்ட செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டார். இதேபோல, சட்டமன்றத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் செங்கோட்டையன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்படி, 11- ஆவது முறையாக சட்டமன்றத்துக்கு செங்கோட்டையன் தேர்வாகி எம்எல்ஏ பதவியை அலங்கரித்து வருகிறார். அதிமுகவில் இருந்தது போல தற்போதும் தமிழக வெற்றி கழகத்தில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.