நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. மதுரையில் த.வெ.க வின் இரண்டாவது மாநில மாநாடு?

TVK State Conference Meeting: ஆகஸ்ட் மாதம் இறுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. மதுரையில் த.வெ.க வின் இரண்டாவது மாநில மாநாடு?

கோப்பு புகைப்படம்

Published: 

12 Jul 2025 10:46 AM

தமிழக வெற்றிக் கழகம், ஜூலை 12, 2025: தமிழக வெற்றி கழகம் தரப்பில் மாநில அளவிலான இரண்டாவது மாநாடு மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென் மாவட்டங்களில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை மற்றும் பலத்தை நிரூபிக்கும் விதமாக இந்த மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நடக்க இன்னும் பத்து மாத காலங்களே இருக்கக்கூடிய நிலையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரதான கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அதிமுக தரப்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு உள்ளார். திமுக தரப்பில் ஓரணையில் தமிழ்நாடு, ஒன்றிணைவோம் வா என பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பாஜக தரப்பிலும் ஆகஸ்ட் முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தோறும் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது நாம் தமிழர் கட்சி தரப்பிலும் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

த.வெ.கவின் முதல் மாநாடு:

இப்படி இருக்கும் சூழலில் தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகம் அரசியலில் பெரும் பேசுப் பொருளாக மாறியுள்ளது. அதேபோல் அரசியல் வல்லுநர்களின் கவனத்தையும் இது ஈர்த்துள்ளது. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டதிலிருந்தே தலைவர் விஜய் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்த வருகிறார். அதேசமயம் 2024 ஆம் ஆண்டு கட்சியின் முதல் மாநாடு நடந்தது இந்த முதல் மாநாடு மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் அதற்கு போதிய அனுமதி கிடைக்காத நிலையில் விக்ரவாண்டியில் நடைபெற்றது.

Also Read: விஜயுடன் பயணிப்பது கடினம்.. தனித்து நின்று தான் போட்டி – சீமான்..

கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடானது நடத்தப்பட்டது. இதில் லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். இந்த மாநாட்டின் மூலம் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை கோட்பாடுகள் என்ன என்பதை தலைவர் விஜய் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக கட்சியை பலப்படுத்தும் வகையில் செயற்குழு கூட்டம், உறுப்பினர்கள் கூட்டம், மாவட்ட செயலாளர் கூட்டம், பூத் ஏஜெண்ட்டுகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் என பல்வேறு கட்டங்களாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு:

2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு என கட்சி தொடங்கிய போது தலைவர் விஜய் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க கட்சி தரப்பில் பணிகள் ஆயத்தமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் இருந்து தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் மாநாடு நடத்தி மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read: நாளை நடைபெறும் தமிழக வெற்றிக் கழக போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி..! 

மதுரையில் 2வது மாநில மாநாடு?

அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் இறுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஏற்கனவே நடிகர் விஜய்க்கு ஓரளவு ஆதரவு இருக்கும் நிலையில் தென் மாவட்டங்களில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது