2026 சட்டமன்ற தேர்தல்: திமுக உடன் கைக்கோர்க்கும் தேமுதிக.. எத்தனை இடங்கள் தெரியுமா?
DMK - DMDK Alliance: ஆளும் கட்சியான திமுகவுடன் தேமுதிக முதல் முறையாக கைகோர்க்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் தேமுதிக இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டதாகவும், அதற்கு சம்மதம் கிடைக்காத நிலையில், ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஜனவரி 29, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் அதற்கான பணிகளை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், தற்போது வரை தேமுதிக எந்தக் கூட்டணியில் இணையப் போகிறது என்ற முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தைப் பொருத்தவரையில் தற்போது நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. அதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்டவை அடங்கும். தேமுதிகவைப் பொருத்தவரையில், வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலை ஆளும் திமுகவுடன் கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெருங்கும் தேர்தல் – கூட்டணி யாருடன்?
ஏற்கனவே தேமுதிக தரப்பில், தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் என்ற கருத்துகளும் வெளியானது. ஆனால் இன்னும் சில மாதங்கள் தேர்தலுக்கு இருக்கும் சூழலில், தற்போது வரை தேர்தல் கூட்டணி குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதே நேரத்தில், பல அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி நிலைப்பாடுகளை அறிவித்து, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் நிலையில், தேமுதிக, ஓ. பன்னீர்செல்வம், ராமதாஸ் தலைமையிலான பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இன்னும் கூட்டணி முடிவு குறித்து அறிவிக்கவில்லை.
தொடக்கத்தில் தேமுதிக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில் இரட்டை இலக்க தொகுதிகளை தேமுதிக கேட்டு வந்ததாகவும், அதற்கு திமுகவும் அதிமுகவும் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
திமுகவுடன் கைக்கோர்க்கும் தேமுதிக:
2025ஆம் ஆண்டு, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 2026 ஜனவரி மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் அந்த மாநாடு முடிந்த பின்னரும், “ஆளும் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் கூட்டணியை அறிவிக்காதபோது, நாம் மட்டும் ஏன் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்” என கூறி, அப்போதும் கூட்டணி அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
மேலும் படிக்க: வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை..கிலோ கணக்கில் கடல் அட்டைகள்-குதிரைகள் பறிமுதல்..ராமநாதபுரத்தில் பரபரப்பு!
இந்தச் சூழலில், ஆளும் கட்சியான திமுகவுடன் தேமுதிக முதல் முறையாக கைகோர்க்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் தேமுதிக இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டதாகவும், அதற்கு சம்மதம் கிடைக்காத நிலையில், ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேமுதிகவிற்கு 7 இடங்கள்?
மொத்தமாக தேமுதிகவிற்கு ஏழு இடங்கள்—அதில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம்—ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேமுதிக தரப்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு தொகுதி குறிப்பாக ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும், அதற்கு ஆளும் திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பரந்தூர் விமான நிலையத்தால் சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?
விருதுநகர் மாவட்டத்தில் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வெற்றி பெற்றால், விஜய பிரபாகரன் சட்டமன்ற உறுப்பினராகவும், பிரேமலதா விஜயகாந்த் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
அப்படி இல்லை என்றால், விருதுநகரில் தோல்வியடைந்த விஜய பிரபாகரனுக்கு அந்த மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதுவாக இருந்தாலும், இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.