தினசரி நான் செங்கோட்டையன் இடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் – ஓ. பன்னீர்செல்வம்..

AIADMK OPS Pressmeet: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், “ தலைவர்கள் இணையவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து கட்சியை காப்பாற்றுவார்கள். நானும் செங்கோட்டையனும் தொலைபேசியில் தினசரி பேசிக் கொண்டிருக்கிறோம். சந்திக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. அடுத்ததாக செங்கோட்டையன் எடுக்கப் போகும் முடிவைப் பொறுத்து நான் கருத்தை தெரிவிப்பேன்” என பேசியுள்ளார்.

தினசரி நான் செங்கோட்டையன் இடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் - ஓ. பன்னீர்செல்வம்..

ஓபிஎஸ்

Published: 

15 Sep 2025 14:15 PM

 IST

சென்னை, செப்டம்பர் 15, 2025: அதிமுகவில் உட்கட்சி விவகாரம் பூதகரமாக வெடித்துள்ள நிலையில், அதிமுக ஒன்றிணைய வேண்டும்; தலைவர்கள் ஒன்றிணையவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து கட்சியை காப்பாற்றுவார்கள் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தரப்பில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அதிமுகவைப் பொருத்தவரையில், உட்கட்சி விவகாரம் வெளிவந்துள்ளது. குறிப்பாக, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்து, அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார்.

அதிமுக உட்கட்சி விவகாரம்:

இந்த சூழலில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தொடர் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செங்கோட்டையன் சொன்ன கருத்தை வரவேற்கும் விதமாக சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் இதையே தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: 10 நாட்கள் கெடு ஓவர்.. அடுத்த திட்டம் என்ன? செங்கோட்டையன் சொன்ன முக்கிய சேதி

அதிமுக பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்கவில்லை என்றால், ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் இணைந்து ஒரு அணியை உருவாக்கலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிமுகவின் வாக்கு வங்கி கடுமையாக பிளவுபடும் எனவும் கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து, உட்கட்சி விவகாரம் தொடர்பாக பேசியிருந்தார். இந்த சூழலில், செப்டம்பர் 16, 2025 அன்று எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல இருக்கிறார்.

தலைவர்கள் ஒன்றிணையவில்லை என்றால், தொண்டர்கள் கட்சியை வழிநடத்துவார்கள்:

அதிமுகவில் உட்கட்சி விவகாரங்கள் வெளிப்படையாக வெளிவந்திருக்கக் கூடிய நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 117வது பிறந்த நாளை ஒட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மலர்ப் புவி மரியாதை செலுத்தினார்.

மேலும் படிக்க: அழைக்கும் பாஜக மேலிடம்? டெல்லி செல்லும் இபிஎஸ்.. அதிமுகவில் பரபரப்பு!

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். தொண்டர்கள் மக்கள் மனநிலை உணர்ந்து அதன்படி செயல்பட உறுதி எடுக்க வேண்டும். அதிமுக ஒன்றிணைய வேண்டும்; தலைவர்கள் இணையவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து கட்சியை காப்பாற்றுவார்கள்.

நானும் செங்கோட்டையனும் தினசரி பேசி வருகிறோம்:

நானும் செங்கோட்டையனும் தொலைபேசியில் தினசரி பேசிக் கொண்டிருக்கிறோம். சந்திக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. அடுத்ததாக செங்கோட்டையன் எடுக்கப் போகும் முடிவைப் பொறுத்து நான் கருத்தை தெரிவிப்பேன். எதுவும் நடக்கலாம்; அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. அரசியலுக்கு வருபவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தை சொல்லித்தான் ஆக வேண்டும்” என்று தெரிவித்தார்.