திமுகவிடம் கூடுதல் தொகுதிகள்-தவெவுடன் கூட்டணி…காங்கிரஸின் நிலைப்பாடு என்ன!
Congress Plan To Alliance For DMK Or Tvk: தமிழகத்தில் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்டு பெற வேண்டும் அல்லது தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

கூட்டணி குறித்த காங்கிரஸின் நிலைப்பாடு என்ன
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை பணிகளை முடுக்கி விட்டுள்ளன. இதில், சில கூட்டணி கட்சிகள் இடையே குழப்பம் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, அதிமுக- பாஜக கூட்டணியில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், தற்போது திமுக கூட்டணிலும் குழப்பம் தொற்றி உள்ளது. அண்மையில் ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும், காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு நிர்வாகியுமான பிரவீன் சக்கரவர்த்தி தமிழகத்தின் கடன் தொகையை உத்தரபிரதேச மாநிலத்துடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. இருப்பினும், இவரின் இந்த கருத்து திமுக -காங்கிரஸ் இடையே விரிசலை ஏற்படுத்தியது. மேலும், இவருக்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர் எம். பி. தெரிவித்த கருத்தால் இரு கட்சிகளிடையே விரிசல், உரசலாக மாறி உள்ளது.
திமுக-காங்கிரஸ் இடையே சலசலப்பு
மேலும், பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த கருத்து அவருடைய சொந்த கருத்து எனவும், பாஜக, ஆர். எஸ். எஸ். மனநிலை உடையது என்றும், அவரது கருத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்றும் செல்வப் பெருந்தகை தெரிவித்திருந்தார். தமிழகத்தில் மூன்று தேர்தல்களை திமுக கூட்டணி வெற்றிகரமாக சந்தித்திருந்த நிலையில், 4-ஆவது தேர்தலிலும் வெற்றி கூட்டணியாக தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியால் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், திமுகவுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒரு பிரிவும், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மற்றொரு பிரிவுமாக காங்கிரஸில் இரு அணிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மதிமுக அழைப்பிதழில் பிரபாகரன் படம் தான் காரணமா?..வைகோ நிகழ்ச்சியை புறக்கணித்த காங்கிரஸ்..
தவெகவுடன் கூட்டணி அமைக்க கோரும் குரல்
இதனிடையே, திமுகவுடனான கூட்டணியை முறித்து விட்டு, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் குரல் எழுந்துள்ளதாகவும் தெரிகிறது. இதற்கு அச்சாரம் அமைப்பது போல ராகுல் காந்திக்கு நெருக்கமான நபரான பிரவீன் சக்கரவர்த்தி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை அண்மையில் சந்தித்து பேசி இருந்தார். இந்த சந்திப்பு காங்கிரஸ்-தவெக கூட்டணிக்கு அச்சாரமா என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் குழு முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது.
திமுகவிடம் கூடுதல் தொகுதி-தவெகவுடன் கூட்டணி
திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்டு பெற வேண்டும் என்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்த பேச்சை காங்கிரஸ் தலைமை அனுமதிக்கிறதா அல்லது தவெக கூட்டணியில் இணைய உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை காங்கிரஸ் கட்சிக்கு தான் தமிழக வெற்றிக் கழகம் தேவையை தவிற, விஜய்க்கு காங்கிரஸ் கட்சி தேவையில்லை. தமிழக காங்கிரஸ் கட்சியின் இந்த போக்கை திமுக பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கும் போது தான்…
ஏனென்றால் கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை தான் முடிவு எடுக்கும் என்பதால், இதில், தமிழக காங்கிரஸார் பேச்சை கவனத்தில் எடுத்தக் கொள்ள தேவையில்லை என்று கூறப்படுகிறது. எது எப்படியோ, தேர்தல் நெருங்கும் போது தான் காங்கிரஸ், திமுக கூட்டணியிலேயே தொடர்கிறதா அல்லது தவெக கூட்டணியில் இணைகிறதா என்பது தெரிய வரும்.
மேலும் படிக்க: தமிழக காங்கிரஸ் அழிவுக்கு செல்வப்பெருந்தகையே சான்று…அண்ணாமலை நேரடி அட்டாக்!