விண்ணை முட்டும் விமான கட்டணம்… சென்னை டூ மதுரை, தூத்துக்குடிக்கு எவ்வளவு தெரியுமா… கலங்கும் பயணிகள்!
Tamil Nadu Airfares Rise sharply: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் வாக்குகளை பதிவு செய்வதற்காக பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதை மையமாக வைத்து விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களுக்கான பயண கட்டணங்களை கடுமையாக உயர்த்தி உள்ளன. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் விமான கட்டணம் கடுமையாக உயர்வு
தமிழகத்தில் நாளை வியாழக்கிழமை ( ஏப்ரல் 23) சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தமிழக தேர்தலுடன் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் வாக்கு சதவீதம் அதிகரித்திருந்தது. அதன்படி, தமிழகத்திலும் அதிகரிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க. சட்டமன்ற தேர்தலில் தங்களது வாக்கை பதிவு செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் வாக்காளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். இவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.
வாக்காளர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் – பேருந்துகள் இயக்கம்
அதன்படி, இந்த சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளில் அதிக அளவு பொதுமக்கள் கூட்டம் இருக்கும் பட்சத்தில் கூடுதல் ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை மையமாக வைத்து விமான நிறுவனங்கள் தங்களது விமானங்களுக்கான பயண கட்டணங்களை கடுமையாக உயர்த்தி உள்ளது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம்.. அனைவரும் வாக்களியுங்கள் – எடப்பாடி பழனிசாமி
சென்னையில் இருந்து செல்லும் விமானங்களில் கட்டணம் கடுமையாக உயர்வு
அதன்படி, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு செல்வதற்கு ஒரு பயணிக்கு ரூ. 17, 527 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல, சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை சர்வதேச விமான நிலையத்துக்கு ஒரு பயணிக்கு பயண கட்டணமாக ரூ. 13, 320-ம் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு ஒரு பயணிக்கு ரூ. 29 ஆயிரத்து 397 கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை
சட்டமன்றத் தேர்தலையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை மையமாக வைத்து தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணத்தை வசூலிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதே போல, விமானத்திலும் பயணிகளுக்கான கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இது சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் வாக்காளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: நிறைவுபெறும் தேர்தல் பிரச்சாரம்.. மாலை 6 மணி முதல் அமலுக்கு வரும் தேர்தல் விதிமுறைகள்..