திருமண பரிசு பொருட்களுக்கு வரி விதிக்கப்படுமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Should You Pay Tax for Your Wedding Gifts | இந்திய கலாச்சாரத்தில் திருமணம் ஒரு மிக முக்கிய நிகழ்வாக உள்ளது. அதற்காக ஏராளமான பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், திருமணத்திற்கு வரும் பரிசுகளுக்கு வரி செலுத்த வேண்டுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவை பொருத்தவரை பொதுமக்கள் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அதாவது வருமான வரி (Income Tax) , ஜிஎஸ்டி (GST – Goods And Services Taxes) உள்ளிட்டவை செலுத்த வேண்டும். ஒருசில குறிப்பிட்ட பொருட்களை தவிர மற்ற அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். இதில் பரிசு பொருட்களும் அடங்கும். அந்த வகையில், திருமணத்திற்கு வரும் பரிசு பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டுமா?, அது குறித்து இந்திய வருமான வரி சட்டம் (Income Tax Law) கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருமணத்திற்கு வரும் பரிசு பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டுமா?
இந்தியாவில் திருமணத்திற்கு வரும் பரிசு பொருட்களுக்கு வரி விதிக்கப்படாது. ஆனால், அதற்கான ஆதாரத்தை நாம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. பெரும்பாலான ஜோடிகள் தங்களது திருமணத்தை மிக பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும், தங்களது வாழ்க்கை துணைக்கு விலை உயர்ந்த பரிசை வழங்க வேண்டும் என நினைக்கின்றனர். அவ்வாறு அவர்கள் நினைக்கும் பட்சத்தில் அதற்கான உரிய ஆதாரம் மற்றும் விளக்கத்தை வருமான வரித்துறைக்கு அவர்கள் வழங்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.
இதையும் படிங்க : ரியல் எஸ்டேட் Vs தங்கம்.. இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது?




திருமண பரிசு பொருட்களுக்கு வரி இல்லை
பொதுவாக யாரிடமிருந்தேனும் ரூ.50,000-க்கு மேல் பரிசு பொருட்களை பெற்றால் அதற்கான முழு வரியையும் செலுத்த வேண்டும். ஆனால், திருமண பரிசு பொருட்களில் அத்தகைய கட்டுபாடுகள் எதுவும் இல்லை. மணமக்களின் நெருங்கிய உறவினர்களான பெற்றோர், உடன் பிறந்தவர்கள், உடன் பணியாற்றும் நபர்கள், தூரத்து உறவினர்கள் என யார் அவர்களுக்கு பரிசு வழங்கினாலும் அந்த பரிசு பொருட்களுக்கு எந்த விதமான வரியும் விதிக்கப்படாது.
திருமண பரிசு பொருட்கள் குறித்த முக்கிய விவரங்கள்
விதிகளின் படி திருமணத்தின் போது நெருங்கிய உறவினர்கள் வழங்கும் பரிசுகள் மட்டுமே வரி விலக்கு பெற தகுதியானவை. ஆனால், நீதிமன்றத்தின் கூற்றின்படி, உறவினர்கள் வழங்கும் பரிசு பொருட்களுக்கும் வரி விலக்கு பொருந்தும். திருமணத்திற்கு வழங்கப்படும் பரிசு பொருட்கள் அதே தேதியில் வழங்கப்பட வேண்டும் என்ற எந்த வித அவசியமும் இல்லை என்றும் திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் வழங்கப்படும் பரிசு பொருட்களும் இந்த வரி விலக்கு பெற தகுதியானது என நீதிமன்றம் கூறுகிறது. இதேபோல திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு வழங்கப்படும் பரிசு பொருட்களும் திருமண பரிசாக கருதப்பட்டு அவற்றுக்கும் வரி விலக்கு வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறுகிறது.
இதையும் படிங்க : Personal Loan-ஐ மையப்படுத்தி நடைபெறும் மோசடிகள்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
திருமண பரிசு பெறும்போது கட்டாயம் செய்ய வேண்டியது
என்னதான் உங்களது திருமணத்திற்கு பரிசு வந்தாலும் வருமான வரித்துறை அதனை வெறும் வாய் வார்த்தையாக நம்பாது. காரணம், நீங்கள் உங்கள் திருமணத்திற்கு பெரும் பரிசுகள் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.
- திருமண பரிசுடன் வழங்கப்படும் வாழ்த்து செய்தி.
- மொய் பணத்தின் கவரின் அந்த பரிசை யார் வழங்கினார்கள் என்பது குறித்த விவரம்.
- திருமணத்தில் பரிசு பெறுவதை போன்ற புகைப்படங்கள்.
- அந்த பரிசு பொருள் தொடர்பாக பரிசு வழங்கிய நபருடனான உரையாடல்.
உங்களது திருமணத்திற்கு வழங்கப்படுவதாக நீங்கள் கூறும் பரிசு பொருட்கள் உண்மையில் உங்களது திருமணத்தில் தான் வழங்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய வருமான வரித்துறை மேற்குறிப்பிட்ட இந்த விவரங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.
இதையும் படிங்க : பிள்ளைகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய பெற்றோர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 3 முக்கிய திட்டங்கள்!
திருமண ஜோடிகள் கவனத்தில் கொள்ள வேண்டியது
எனவே திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்யும் நபர்கள் திருமண ஏற்பாடுகளுடன், திருமணத்திற்கு வரும் பரிசு பொருட்களுக்கான ஆதாரத்தை ஆவணப்படுத்த வேண்டியது கட்டாயமாக உள்ளது. இவ்வாறு திருமணத்திற்கு வரும் பரிசு பொருட்களுக்கான ஆதாரங்களை ஆவணப்படுத்துவதன் மூலம், வருமான வரித்துறையிடம் இருந்து வரும் நெருக்கடிகளை தவிர்க்க முடியும். எனவே திருமணம் செய்துக்கொள்ள போகும் ஜோடிகள் இது குறித்து கவனமாக செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.