வாகனம் திருடப்பட்டால் இந்த தவறை செய்யாதீர்கள் – காப்பீடு இருந்தாலும் இழப்பீடு கிடைக்காது!
Motor Insurance Claim Tip : வாகனம் திருடப்பட்டால் உடனடியாக காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும் என நினைக்க வேண்டாம். நீங்கள் செய்யும் சில தவறுகளால் உங்களுக்கு இழப்பீடு மறுக்கப்படலாம். இந்த கட்டுரையில் வாகனம் தொலைந்தால் உடனடியாக செய்ய வேண்டியவை குறித்து பார்க்கலாம்.

நாம் ஒரு வாகனம் வாங்கும் போது அதன் விலை, மைலேஜ், வசதிகள், ஸ்டைல் என பல விஷயங்களை பார்த்து, கவனமாக தேர்வு செய்கிறோம். ஆனால், அதைப் போலவே முக்கியமானது தான் வாகன காப்பீடு (Motor Insurance). வாகனங்கள் வெறும் போக்குவரத்து கருவியாக மட்டும் இல்லாமல், வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன. அதில் ஏற்படும் திடீர் விபத்துகள், திருட்டுகள், தொலைந்து போவது போன்ற நிகழ்வுகள் நம்மை பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் பாதிக்கக்கூடியவை. இந்தியாவில் சட்டப்படி ஒரு வாகனத்திற்கு காப்பீடு கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில் வாகனங்கள் திருடப்பட்டபோது உடனடியாக போலீசாருக்கும் (Police), காப்பீட்டு நிறுவனத்திற்கும் தெரிவிக்காமல் தாமதித்தால் உங்களுக்கு நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வாகனம் திருடப்பட்டால் உடனடியாக புகார் அளிப்பது அவசியம்
நமது வாகனம் திருடப்பட்டால் முதலில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். பின்பு காப்பீட்டு நிறுவனத்திற்கு விரைவில் தகவல் அளிக்க வேண்டும். இது காப்பீட்டு நிறுவனங்கள் உடனடியாக விசாரணையில் இறங்கி, உங்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்யும். காவல்துறையும் உங்கள் வாகனத்தை தேடும் பணிகளில் உடனடியாக இறங்குவதற்கு உதவும்.
இதையும் படிக்க : எக்ஸ் ஷோரூம் காரின் விலை குறைவு, ஆன் ரோடு விலை அதிகம் – ஏன் இந்த மாற்றம்?




இந்த நிலையில் சொலோமோன் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனியிடம் தனது வாகனத்துக்கு ராஜேஷ்குமார் என்பவர் இன்சூரன்ஸ் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் அவரது வாகனம் திருடப்பட்ட நிலையில் அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க, எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அவர் புகார் தெரிவிக்க தாமதமாகியிருக்கிறது. இதனை காரணம் காட்டி இன்சூரன்ஸ் நிறுவனம் அவருக்கு இழப்பீடு வழங்க மறுத்திருக்கிறது. இது தொடர்பாக ராஜேஷ் குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றனம், அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி, இன்சூரனஸ் நிறுவனம் அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
புகார் அளிக்க தாமதமானால் என்ன நடக்கும்?
இந்த வழக்கு நமக்கு சொல்வது என்னவென்றால் நம் வாகனம் திருடப்ட்டால், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து, எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை இன்சூரன்ஸ் கம்பெனி உங்களுக்கு இழப்பீடு வழங்க மறுத்தால், நீங்கள் பதிவு செய்த எஃப்ஐஆர் உங்களுக்கு உதவும். ஒருவேளை புகார் அளிக்க நாம் காலதாமதம் செய்தால் சம்பவத்தின் உண்மை தன்மையில் சந்தேகம் எழச் செய்யும். இது காப்பீடு நிறுவனம் உங்களுக்கு இழப்பீடு வழங்காமல் போக அதிக வாய்ப்பை வழங்குகிறது. மேலும் நமது வாகனம் குறித்த அனைத்து ஆவணங்களையும் வைத்திருப்பது அவசியம்.
இதையும் படிக்க: அவசரமாக பணம் தேவைப்படுகிறதா? காருக்கு கடன் வழங்கும் வங்கிகள்!
இது குறித்து வாகன காப்பீட்டு நிறுவனர் தெரிவிப்பதாவது, “வாகனம் திருடப்பட்டவுடன் போலீசில் புகார் தெரிவித்து, எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து, காப்பீட்டு நிறுவனத்துக்கும் தகவல் அளிக்க வேண்டும். இதுவே விசாரணையை எளிதாக்குவதோடு உங்களுக்கு இழப்பீடும் உடனடியாக கிடைக்கும் என்றார்.