வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிகரிப்பு..
Gold Price: டிசம்பர் 22, 2025 தேதியான இன்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூபாய் 12,570-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூபாய் 1,00,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூபாய் 13,719-க்கும், ஒரு சவரன் ரூபாய் 1,09,752-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டிசம்பர் 22, 2025: தங்கம் விலை 2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து ஏறுமுகமாகத்தான் இருந்து வருகிறது. தங்கத்தின் விலை தற்போது ஒரு லட்சத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் 22, 2025 ஆம் தேதியான இன்று தங்கம் விலை வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 720 அதிகரித்து, ஒரு சவரன் ரூபாய் 1,00,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராமுக்கு ரூபாய் 90 அதிகரித்து ரூபாய் 12,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வரலாறு காணாத உச்சமாகும். பிற்பகலில் விலை உயர்வு அதிகரித்ததன் காரணமாக இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் வெள்ளி விலை:
தங்கத்தின் விலையைப் பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. தங்கம் விலை மட்டுமல்லாமல், வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூபாய் 1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூபாய் 2 லட்சத்து 31 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: தங்க நகை கடனுக்கு செக் வைத்த ஆர்பிஐ.. வங்கிகள் எடுத்த முக்கிய முடிவு!
நவம்பர் மாதத்தில் பெரிய அளவில் தங்கம் விலையில் மாற்றம் இல்லாத நிலையில், டிசம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. குறிப்பாக, டிசம்பர் 15, 2025 அன்று தங்கம் விலை இரண்டு முறை அதிகரிக்கப்பட்டது. அப்போது வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தை அடைந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூபாய் 1,00,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 1,09,224-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தங்கம் விலை கணிசமாக குறைந்தது.
ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகும் தங்கம்:
டிசம்பர் 21, 2025 ஆம் தேதியான நேற்று, தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 99,200-ஆகவும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூபாய் 12,400-ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூபாய் 13,527-ஆகவும், ஒரு சவரன் ரூபாய் 1,08,216-ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
டிசம்பர் 22, 2025 தேதியான இன்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூபாய் 12,570-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூபாய் 1,00,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூபாய் 13,719-க்கும், ஒரு சவரன் ரூபாய் 1,09,752-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 5 உயர்ந்து ரூபாய் 231-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 2,31,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரக்கூடிய 2026 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.