அப்பா சொத்தில் குழந்தைகளுக்கு உரிமை இல்லையா? நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு
Property Rights Clarified : குடும்ப சொத்து தொடர்பான வழக்கு ஒன்றில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து அப்பாவின் சொத்துகள் குழந்தைகளுக்கு சொந்தம் என்ற நம்பிக்கையை கேள்விக்குரியதாக மாற்றியுள்ளன. இது குறித்து சட்ட நிபுணர்கள் முக்கியமான கருத்தை தெரிவித்திருக்கின்றனர். அது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சமீபத்தில் ஒரு வழக்கில் நீதிமன்றத்தின் விளக்கம், குடும்ப சொத்துகள் தொடர்பாக பொதுமக்களிடம் நிலவி வரும் தவறான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. பொதுவாக அப்பாவின் சொத்துகள் அனைத்தும் குழந்தைகளையே சேரும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஆழமாக நிலவி வருகிறது. ஆனால் அது எல்லா நேரங்களிலும் பொருந்தாது என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, பரம்பரை சொத்து மற்றும் சுயமாக சம்பாதித்த சொத்து என்ற இரண்டு வகைகளின் வித்தியாசம் தான், அந்த சொத்தில் வாரிசுகளுக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்பதை நிரூபிக்கும் முக்கிய காரணங்களாகும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது மக்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பாவின் சொத்தில் குழந்தைகளுக்கு உரிமை இல்லையா?
இது தொடர்பாக சட்ட நிபுணர்கள் தெரிவிப்பதாவது, பிறப்புரிமை என்பது பரம்பரையாக வரும் சொத்துகளுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது, ஒரு சொத்து நான்கு தலைமுறைகள் வழியாக தொடர்ந்து வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்து, இதுவரை பிரிக்கப்படாமல் தொடர்ச்சியாக இருந்த சொத்துகளுக்கு மட்டுமே குழந்தைகளுக்கு உரிமை உண்டு. இதற்கு மாறாக, ஒரு நபர் தனது சொந்த வருமானத்தில் வாங்கிய சொத்துகள் அல்லது பரிசாக பெற்ற சொத்துகள் அனைத்தும் சுயசொத்துகளாக கருதப்படுகின்றன.
இதையும் படிக்க : SIP vs PPF.. ரூ.1.5 லட்சத்தை 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் எது அதிக லாபம் தரும்?
இத்தகைய சுயசொத்துகளில், அந்த நபருக்கே முழு உரிமை இருப்பதால், அவர் விருப்பப்படி விற்கவும், பரிசாக வழங்கவும் அல்லது உயில் எழுதி யாருக்கு வேண்டுமானாலும் வழங்கவும் முடியும். இதில் குழந்தைகளை வழங்க வேண்டாம் என தவிர்க்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு பரம்பரை சொத்து கூட சட்டப்படி பிரிக்கப்பட்டுவிட்டால், அது இனி பரம்பரை சொத்தாக கருதப்படாது என்று சட்ட நிபுணர்கள் விளக்குகின்றனர்.
சொத்து தொடர்பான வழக்குகளில், உரிமை பத்திரங்கள், விற்கப்பட்டதற்கான அல்லது பிரிக்கப்பட்டதற்கான ஆவணங்கள், வருவாய் பதிவுகள், வங்கி பரிவர்த்தனை ஆதாரங்கள், குடும்ப மற்றும் சட்ட வாரிசு சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களே முக்கிய ஆதாரங்களாக செயல்படுகின்றன. சொத்து எப்படிப் பெறப்பட்டது, அதன் உரிமை மாற்றங்கள் எப்படி நடந்துள்ளன என்பதையே நீதிமன்றம் முக்கியமாக கருதுகிறது. பல குடும்பங்களில், எல்லா சொத்துகளும் மரபுச்சொத்துதான் என்ற தவறான எண்ணம் கருதப்படுகிறது. மேலும், அனைத்து வாரிசுகளுக்கும் சம பங்கு கட்டாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாகவே நீதிமன்றங்கள் வழக்கு தொடரப்படுகின்றன.
இதையும் படிக்க : 20 ஆண்டுகளுக்கான வீட்டு கடனை வெறும் 12 ஆண்டுகளில் அடைக்கலாம்.. எப்படி தெரியுமா?
மேலும், திருமணத்திற்கு பிறகு சொத்துகளில் மகள்களுக்கு உரிமை இல்லை என்ற பழைய நம்பிக்கையும் இன்னும் சில இடங்களில் நிலவுகிறது. ஆனால், சட்டப்படி மகன்களைப் போலவே மகள்களுக்கும் சம உரிமை உள்ளது என்பதை நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். சட்ட பிரச்னைகளைத் தவிர்க்க, சொத்தின் வகையை தெளிவாக அடையாளம் காணுதல், உரிமை மற்றும் நிதி தொடர்பான ஆவணங்களை முறையாக பராமரித்தல், பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் சொத்து பிரிவினைகளை சட்டப்படி பதிவு செய்தல் ஆகியவை அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும்.