DA Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு?.. வெளியான முக்கிய தகவல்!
Central Govt Employees DA Hike | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இந்த நிலையில், ஊழியர்களுக்கான முதல் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது உயர்வு எப்போது வரும் என ஊழியர்கள் ஆவளுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது அது குறித்து முக்கிய தகவல் தான் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) 2025, ஜூலை மாதம் முதல் 4 சதவீதம் அகவிலைப்படி (DA – Dearness Allowance) உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வளியான பண வீக்கம் தொடர்பான அறிக்கையை மையப்படுத்தி இது கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் பட்சத்தில், அவர்களின் மொத்த அகவிலைப்படி 55 சதவீதத்தில் இருந்து 59 சதவீதமாக உயர்த்தப்படும். இந்த நிலையில், அகவிலைப்படி உயர்வு குறித்து வெளியான தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படும் அகவிலைப்படி உயர்வு
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். பணியில் உள்ளவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதை போலவே, பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் (DR – Dearness Relief) உயர்த்தபடும். இந்த அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆகியவை ஆண்டுக்கு முதல் முறை ஜனவரி மாதத்திலும், இரண்டாவது முறை ஜூலை மாதத்திலும் உயர்த்தப்படும். அதாவது 6 மாத கால இடைவெளியில் இவை உயர்த்தி அறிவிக்கப்படும்.
2025 ஆம் ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி உயர்வு 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில், இரண்டாவது அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பை எதிர்ப்பார்த்து ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் இரண்டாவது அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு?
2025 மே மாதத்தில் AICPI (All India Consumer Price Index) குறியீடு 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தற்போதைய AICPI குறியீடு 144 ஆக உள்ளது. கடந்த சில மாதங்களாகவே AICPI குறியீடு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த குறியீடு ஜுன் மாதத்தில் 144.5 ஆக உயரும் பட்சத்தில் 12 மாதங்களுக்கான சராசரி AICPI குறியீடு 144.17 வரை செல்லும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. இதன் காரணமாக அகவிலைப்படி 58.85 சதவீதம் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மொத்தமாக அகவிலைப்படி 59% சதவீதமாக அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு எப்போது அமலுக்கு வரும்
2025 ஆம் ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது அகவிலைப்படி உயர்வு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.