பட்ஜெட் 2026 : வரி செலுத்துவோருக்கு மீண்டும் குட் நியூஸ் சொல்வாரா நிர்மலா சீதாராமன் – எகிறும் எதிர்பார்ப்பு?

Taxpayer Expectations : மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஸ்டாண்டர்டு டிடெக்ஷன் ரூ.75,000த்தில் இருந்து 1 லட்சம் வரை உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவ்வாறு உயர்த்தப்பட்டால், ஆண்டுக்கு ரூ.13 லட்சம் வரை வருமான வரி செலுத்தாத நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.

பட்ஜெட் 2026 : வரி செலுத்துவோருக்கு மீண்டும் குட் நியூஸ் சொல்வாரா நிர்மலா சீதாராமன் - எகிறும் எதிர்பார்ப்பு?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Updated On: 

17 Jan 2026 21:03 PM

 IST

பட்ஜெட் 2026க்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள வரி செலுத்துபவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பிப்ரவரி 1, 2026 அன்று, ஞாயிற்றுக்கிழமை, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பங்குச் சந்தையும் அந்த நாளில் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பட்ஜெட்டில் பங்கு சந்தை குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பட்ஜெட் 2025ல், மத்திய அரசு மக்களின் வாங்கும் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் வருமான வரியில் முக்கிய மாற்றங்களை அறிவித்தது. குறிப்பாக, 12 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வருமான வரி இல்லை என அறிவிக்கப்பட்டது. ஊதியதாரர்களுக்கு வழங்கப்படும் ரூ.75,000 நிலையான விலக்கு (Standard Deduction) சேர்த்து கணக்கிட்டால், ரூ.12.75 லட்சம் வரை வருமானம் வரி செலுத்த தேவையில்லாத நிலை ஏற்பட்டது. இந்த அறிவிப்புகள் நடுத்தர வர்க்கம் மற்றும் மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்தன.

இதையும் படிக்க : ஊழியர்கள் எப்போது தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து 100% பணத்தை எடுக்கலாம்?.. விதிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!

ஸ்டாண்டர்டு டிடெக்ஷன் அதிகரிக்கப்படுமா?

பட்ஜெட் 2026-ல் ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் வரம்பை ரூ.75,000-இலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வரி செலுத்துபவர்களிடையே வலுப்பெற்று வருகிறது. இந்த மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், ஆண்டு வருமானம் ரூ.13 லட்சம் வரை வரி இல்லாத நிலைக்கு செல்லும். இது ஊதியதாரர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், புதிய வரி முறையின் கீழ் புதிய வருமான வரி ஸ்லாப்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ரூ.4 லட்சம் வரை வரி இல்லை என்றும், அதன் பின்னர் 5%, 10%, 15%, 20%, 25% மற்றும் 30% என வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன. இதன் மூலம் வரி அமைப்பு எளிமையாக்கப்பட்டதுடன், பலரின் வரிச்சுமை குறைந்தது. அதேபோல், புதிய வருமான வரி மசோதா – 2025 அறிவிக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய சட்டத்தில், மொழி எளிமைப்படுத்தப்பட்டு, பழைய மற்றும் தேவையற்ற விதிகள் நீக்கப்பட்டு, பிரிவுகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதனால் வரி சட்டங்களை புரிந்து கொள்வது எளிதாகும் என அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : ரயில் ஒன் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3% தள்ளுபடி – எப்படி பெறுவது?

கடந்த ஆண்டு செய்யப்பட்ட பெரிய மாற்றங்களின் விளைவுகளை அரசு இன்னும் முழுமையாக மதிப்பீடு செய்து வருவதால், இந்த ஆண்டில் நேரடி வரிகளில் பெரிய அறிவிப்புகள் வர வாய்ப்பு குறைவு எனக் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், வாழ்கைச் செலவு மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலத்தில் புதிய வரி முறையில் ஸ்லாப் விகிதங்களில் ஆண்டு தோறும் திருத்தம் செய்யப்படும் பட்சத்தில், அது அதிகமான வரி செலுத்துபவர்களுக்கு பயன் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..
51 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம்.. விடுதலை செய்யப்பட்ட நபர்..
பணம் பற்றாக்குறை காரணமாக காப்பீட்டு பிரீமியம் செலுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இதை செய்தால் போதும்..
"சொமேட்டோவில் நடக்கும் மோசடி சம்பவங்களை பகிர்ந்த சிஇஓ".. எச்சரிக்கை மக்களே!!